×

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது. இது தங்கம் விலை வரலாற்றில் உட்சபட்சம் என்ற சாதனையை படைத்துள்ளது. வரும் வாரங்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 5ம் தேதி சவரன் ரூ.48,120க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகபட்ச விலை என்று கூறப்பட்டது. அதன் பிறகும் 8ம் தேதி ரூ.48,840, 9ம் தேதி ரூ.49,200 என்று எகிறியது. பின்னர் விலை சற்று குறைவதும், மறுநாளே அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது, அன்றைய தினம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு சற்று குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. கடந்த 26ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.49,600க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6215க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,720க்கும் விற்கப்பட்டது. நேற்று மேலும் அதிரடியாக கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6250க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் அனைத்து சாதனைகளையும் நேற்றைய தங்கம் விலை உயர்வு முறியடித்தது. இது வரலாற்றில் உச்சபட்சம் என்ற சாதனையை படைத்தது. சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்படியே விலை அதிகரித்தால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் நடுத்தர மக்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: இஸ்ரேல்-பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடர்கிறது. இது வரும் காலங்களில் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற பெடரல் அமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பது என்று தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு வேளை வட்டியை குறைத்தால் முதலீட்டாளர்களுக்கு அது நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுத்து, தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இதனால், பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இவைதான் தங்கம் விலை தொடர்ந்து உயர முக்கிய காரணம். அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கியே பயணிக்கும். அதே போல வெள்ளியின் விலையும் உயர வாய்ப்புள்ளது. அடுத்த வாரம் இதன் புதிய உச்சம் தெரியவரும். ேதர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் தங்கத்தின் நகர்வுகள் என்பது குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வருவதில் சாத்தியம் இல்லாத நிலையில் தங்கம் விற்பனை சரிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...