×

உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முத்தரசன் இரங்கல்

சென்னை: உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறியதாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ.கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி திமுகழக வேட்பாளராக தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்த தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர். 1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர்.

1980 களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர்.கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று திமுகழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி திமுகழகம் உருவாக்கியவர்களில் அ.கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்த போதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவை தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர்.

உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது. அ.கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள் அ.கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முத்தரசன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Ganesh Samurthi ,Mutharasan Mourangal ,Chennai ,MUTHARASAN ,SECRETARY OF STATE OF THE COMMUNIST PARTY OF INDIA ,GANESUMARTHI ,Facebook ,Ganesh ,Muttarasan Mourngal ,
× RELATED எம்.பி. கணேசமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு