×

காஞ்சிபுரத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு அறம் வளர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம், மார்ச் 28: காஞ்சிபுரத்தில், 52 ஆண்டுகளுக்கு பிறகு அறம் வளர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நகரம் என புகழ்பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில் 108 சிவாலயங்களில் ஒன்றாக அறம் வளர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டநிலையில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு, புதியதாக ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அறம் வளர்த்தீஸ்வரர் கோயிலில், பல லட்சம் ரூபாய் செலவில் புதியதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு, விநாயகர், முருகர், சன்னதிகள் அமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள், முடிவடைந்தநிலையில் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, யாக சாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிவ பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்து, அறம் வளர்த்தீஸ்வரரை வணங்கி வழிபட்டனர். அப்போது, பக்தர்கள் அனைவருக்கும் ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

The post காஞ்சிபுரத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு அறம் வளர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Aram Varkatheeswarar Temple Kumbabhishekam Kolakalam ,Kanchipuram ,Aram Varatheeswarar Temple ,Kumbabhishekam ,Sami ,Aram Varatheeswarar Temple Kumbabhishekam Kolagalam ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...