×

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்: ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம் என்று ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் பொருளாதார வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ‘2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி அதிவேகமாக முன்னேறி வருகிறோம்’ என்று பல இடங்களில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘வரும் 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஆசை அபத்தமானது.

அதனை நிறைவேற்ற முடியாது. நாட்டின் கல்வித்துறை தரவுகளின்படி, குழந்தைகளுக்கு உயர்நிலை கல்வி கொடுக்க முடியவில்லை. பள்ளிகளில் இடைநிற்றல் விகிதமும் அதிகமாக உள்ளது. இவற்றை தீர்க்காமல் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் பற்றி பேசுவது முட்டாள்தனம். வலுவான பொருளாதார வளர்ச்சி என்ற பொய்ப் பிரச்சாரத்தை நம்பி இந்தியா மிகப்பெரிய தவறைச் செய்து வருகிறது. நாட்டில் நிலவும் கட்டமைப்பு பிரச்னைகளுக்கு தீர்வுகாணாமல், இவ்வாறான பொய்யான பிரசாரங்களின் பின்னால் செல்ல வேண்டாம்.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தொழிலாளர்களின் கல்வி மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதாகும். 140 கோடி மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். மிகைப்படுத்தப்பட்ட மற்றும் பொய் பிரசாரங்களை நம்புவதுதான் இந்தியா செய்யும் மிகப்பெரிய தவறு. இந்த பிரசாரம் உண்மையானதா? என்பதை உறுதிப்படுத்த இன்னும் பல வருடங்கள் உழைக்க வேண்டும். இந்தியாவிடம் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் அவர்களுக்கான நல்ல வேலை கிடைத்தால் தான் பலன் கிடைக்கும்.

அதனால் இந்திய தொழிலாளர்களை திறமையானவர்களாக மாற்ற வேண்டும். மேலும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கொரோனா காலத்திற்கு பிறகு, இந்தியப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் 2012க்கு முந்தைய நிலையை காட்டிலும் சரிந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. வியட்நாம் போன்ற பிற ஆசிய நாடுகளை விட இந்தியாவின் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கை குறித்து கவலைப்பட வேண்டும். எட்டு சதவீத வளர்ச்சியை எட்ட இந்தியா இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். வரும் நிதியாண்டில் அது ஏழு சதவீதத்தை தாண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.

அவ்வாறு நடக்கும்பட்சத்தில், உலகின் மிக வேகமாக வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறும். உயர்கல்விக்கான ஆண்டு பட்ஜெட்டை விட, சிப் தயாரிப்புக்கான மானியத்துக்கு அதிக அளவில் செலவிடும் மோடி அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை. இந்தியாவில் தொழில் தொடங்க குறைக்கடத்தி வணிகங்களுக்கான மானியங்கள் சுமார் ரூ.760 பில்லியன் ஆகும். ஆனால், உயர்கல்விக்காக 476 பில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது. கல்வி முறையை சீரமைக்காமல், ‘சிப்’ தயாரிப்பு போன்ற பெரிய திட்டங்களில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது. நல்ல கல்வியை வழங்குவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற தொழில்களில் பயிற்சி பெற்ற பொறியாளர்களை பணியமர்த்த முடியும்’ என்று ரகுராம் ராஜன் கூறினார்.

The post 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்: ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,Maji Governor ,Reserve Bank ,Maji ,NEW DELHI ,RBI ,Governor ,Raghuram Rajan ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி