×

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு?

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தொகுதி பங்கீடு மிகவும் சுமுகமாக நடந்து முடிந்தது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தவுடன் உடனடியாக திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன்படி 22ம் தேதி திருச்சியிலும், 23ம் தேதி திருவாரூரிலும் பேசும் அவர், 15 நாள் சுற்றுப்பயணம் செய்து 15 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.

The post சூடு பிடிக்கும் தேர்தல் களம்: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...