×

அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் 3 தொகுதிகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. மேலும், திமுக கூட்டணியில் அனைத்து தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டு விட்டதால், கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் அதிமுக, பாஜ கட்சிகள் கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 27ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் 28ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பபெற 30ம் தேதி கடைசி நாள். ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொகுதி பங்கீடு மிகவும் சுமுகமாக நடந்தது.

இதில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எந்த தொகுதிகள் என்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல், மதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம், விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம், கொமதேகவுக்கு நாமக்கல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி குமரி, தேனி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், திருச்சி, ஆரணி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தேனி தவிர 8 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது ராகுல்காந்தியுடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழக காங்கிரஸ் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்து உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அமைச்சர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது. இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முதல்வர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் 3 தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, ஆரணிக்கு பதிலாக கடலூரும், திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறையும், தேனிக்கு பதிலாக திருநெல்வேலியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. மேலும், கடந்த முறை திமுக போட்டியிட்ட திருநெல்வேலி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக புதிதாக கோவை, தேனி, ஆரணி, ஈரோடு தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மேலும் கடந்த முறை திமுக கூட்டணியில் பெரம்பலூரில் ஐஜேகே கட்சி போட்டியிட்டது. இந்த முறை இந்த தொகுதியில் திமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக தலைமையிலான கூட்டணியில் நேற்றுடன் தொகுதி பங்கீடு உடன்பாடுகள் நிறைவடைந்துவிட்டது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து விட்டன. திமுக, காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் வேட்பாளரை இறுதி செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளன. விசிகவைப் பொறுத்தவரை சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

விழுப்புரத்தில் தற்போது எம்பியாக உள்ள ரவிக்குமார் போட்டியிடுவாரா அல்லது அவருக்கு பதில் வேறு ஒருவர் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் அதற்கு பெரிய அளவில் போட்டியில்லை என்று கூறப்படுகிறது. திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை விரைவில் அறிவித்து விட்டு, தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில் பாஜ கூட்டணியில் பாமகவை சேர்க்க பலகட்ட முயற்சிகள் டெல்லி மேலிடம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

கடைசியாக அன்புமணிக்கு சில உறுதிமொழிகளை கொடுத்து கூட்டணியில் சேர வைத்து விட்டது. அதிமுகவை மிரட்டிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் வளைந்து கொடுக்கவில்லை. தேமுதிகவையும் இழுக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணியை அறிவிக்க முடியாமல் உள்ளது. அதேநேரத்தில் அதிமுகவும் பாமகவை நம்பி இவ்வளவு நாட்கள் காத்திருந்தனர். நேற்றுதான் பாமக வழக்கம்போது கைவிரித்து விட்டது. இதனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பல கட்ட முயற்சிகளை அதிமுக மேற்கொண்டுள்ளது. இதனால் அக்கட்சியும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

* ஓரிரு நாளில் வேட்பாளர்கள் அறிவிப்பு- செல்வப்பெருந்தகை
தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘‘ஏற்கனவே நாங்கள் சொன்னபடி பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் கிடையாது. இனிப்பான செய்தியை சொல்வோம் என்றோம். அதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளை பெற்றோம். அதேபோன்று நாங்கள் கேட்ட தொகுதிகளையும் தந்திருக்கிறார்கள். அடுத்து உங்களை சந்திக்கும்போது, 40 தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்ற இனிப்பான செய்தியுடன் சந்திப்போம். கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் எங்களுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் வாங்கியுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும்’’ என்றார்.

The post அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,DMK alliance ,Chennai ,Chief Minister ,M.K.Stall ,Congress ,Puducherry ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...