×

நெல்லை, தூத்துக்குடியில் களைக்கட்டும் பதநீர் சீசன்: நகர்புறங்களுக்கு கருப்பட்டி வரத்து அதிகரிப்பு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதநீர் சீசன் இப்போதே களைக்கட்டும் சூழலில், நகர்புறங்களுக்கு கருப்பட்டி வரத்து அதிகரித்துள்ளது. தென்மாவட்டங்களில் பதநீர் சீசன் கோடைகாலத்தை மையமாக கொண்டு மார்ச் 15 ல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவுறும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழையை பெற்றதால், பனை மரங்களுக்கு தேவையான நீர்சத்தையும், மண்வளத்தையும் தேரிகாடுகள் பெற்று திகழ்கின்றன.

இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 தினங்களுக்கு முன்னரே பதநீர் சீசன் தொடங்கிவிட்டது. திசையன்விளை சுற்றுவட்டாரங்கள், திருச்செந்தூர், பேய்க்குளம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், விளாத்திக்குளம், குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் பணிகளில் காலையும், மாலையும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு மாவட்டங்களில் மட்டுமே சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் பனை தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இத்தொழிலை நம்பி வாழும் பனை தொழிலாளர்கள் தினமும் 7 முதல் 10 பனைகள் வரை ஏறி, பதநீர் எடுப்பது வழக்கம். பனை மரங்களில் தொழிலாளர்கள் தினமும் ஏறி சீவிவிடும் பாளை, நன்கு திரட்சியாக இருப்பதால், அதில் காணப்படும் ஈரப்பதம் காரணமாக பனை மரத்தில் கட்டப்பட்டிருக்கும் கலயங்கள் நிரம்பி வருகின்றன. தினமும் 3 டின்கள் வரை பதநீர் கிடைப்பதால், அவற்றை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதநீர் ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனையாவதால், சில தொழிலாளர்கள் அருகில் உள்ள நகர்புறங்களில் பதநீர் விற்பனையையும் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர்புறங்களுக்கு கடந்த மாதம் வரை கருப்பட்டி வரத்து குறைவாக இருந்த நிலையில், தற்போது கடைகளுக்கு கருப்பட்டி வரத்து அதிகரித்துள்ளது பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கருப்பட்டி தவிர பனங்கற்கண்டு, சில்லு கருப்பட்டி, தவன், கிழங்கு, பனம்பழம் ஆகியவையும் தற்போது கூடுதலாக மார்க்கெட்டுகளுக்கு வர தொடங்கியுள்ளது.

இது தவிர பனை தொழிலாளர்களின் குடும்பத்தினர் நகர்புற சாலைகளில் ஆங்காங்கே கடை விரித்து பனம்பழம், கிழங்கு, பதநீர், நுங்கு உள்ளிட்ட பொருட்களையும் தேவைக்கேற்ப விற்பனை செய்து வருகின்றனர். உடல்சூட்டை தணிக்கும் பதநீரை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கி பருகிவிட்டு செல்கின்றனர். கடந்தாண்டு சீசனில் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.250 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிலோ கருப்பட்டி ரூ.300ஐ தாண்டி காணப்படுகிறது. கருப்பட்டி வரத்து அதிகமானால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். நெல்லை, தூத்துக்குடியில் தயாராகும் கருப்பட்டிகளுக்கு மும்பை போன்ற பெருநகரங்களில் நல்ல கிராக்கி நிலவுவதால், அங்கும் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

The post நெல்லை, தூத்துக்குடியில் களைக்கட்டும் பதநீர் சீசன்: நகர்புறங்களுக்கு கருப்பட்டி வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Nellai ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...