×

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழப்பு..!!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சத்யமங்களம் வனசரகத்தை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் ரோந்து சென்ற போது பவானிசாகர் பண்ணாரி சாலையில் கிழக்கு பகுதியில் உள்ள வனத்தில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் படுத்திருப்பதை கண்டனர். மேலும் அதன் அருகில் குட்டியான 2 மாத பெண் யானை தாயை சுற்றி வருவதை கண்ட வனத்துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறையினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரின் மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது. உடல்நலக்குறைவால் அவதிபட்ட பெண் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் ஊசி மருந்துகள் செலுத்தி சிகிச்சை மேற்கொள்ளபட்டது. மேலும் அவ்வப்போது அந்த யானைக்கு தண்ணீர் மற்றும் பசும்புல் கொடுக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த காட்டுயானை உடல் நலக்குறைவால் படுத்து கிடந்ததால் மேலே எழ முடியாமல் தவித்து வந்தது. இதற்கிடையே தாயை பிரிந்த பெண் குட்டியானையானது தாயின் அருகில் செல்ல முயற்சித்தது.

அப்போது வனத்துறையினர் தாய் யானையிடமிருந்து குட்டியானையை பிரித்து 5 அடி ஆழமுள்ள ஒரு குழியை வெட்டி அந்த குழிக்குள் குட்டியானையை வைத்து அதற்கு லாக்டோஜென் போன்ற திரவ உணவுகள் கொடுத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் காட்டுயானையானது சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த பெண் குட்டியானையை மற்ற யானை கூட்டங்களுடன் சேர்ப்பதற்காக இன்று காலை முதல் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர் அப்போது திம்பம் மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு யானை கூட்டத்துடன் குட்டியானையை சேர்க்க முயன்ற போது அந்த யானை கூட்டம் இந்த குட்டியானையை அழைத்து சென்றது.

மேலும் வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அந்த யானையை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தமிழக அரசின் கூடுதல் வனத்துறை செயலாளர் பிரியசாகு ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனக்குழுவினர் உடல்நிலை சரியில்லாத பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தங்களால் இயன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு மிகவும் கடினமான நேரம் மேலும் அந்த யானையின் 2 மாத குழந்தையை அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு கவனித்து வருகிறது என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

The post சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pannari ,Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve ,Sathyamangalam Forest Department ,Pannari forest ,Bhavanisagar Pannari road ,Dinakaran ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...