×

நடத்தை சந்தேகத்தால் டார்ச்சர் புகார் கொடுக்கச்சென்ற மனைவி வெட்டிக்கொலை: பஸ் நிலையத்தில் கணவன் வெறிச்செயல்

திருமலை: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் அவுக்கு நகரை சேர்ந்தவர் கோகுலாபுரம் ரங்கசாமி(40). இவரது மனைவி குமாரி(37). திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரங்கசாமி வியாபார நிமித்தமாக அவ்வப்போது வெளியூர் சென்று 3 அல்லது 4 மாதம் கழித்து வீட்டிற்கு வருவாராம். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மனைவியின் நடத்தை மீது ரங்கசாமிக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 15ம் தேதியும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த குமாரி குழந்தைகளுடன் கோகுலாம்பள்ளியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று தனது சித்தி கங்கம்மா(50) மற்றும் உறவினர்களுடன் குமாரி, அவுக்கு போலீசில் தனது கணவர் மீது புகார் கொடுக்க சென்றார். அங்கு எஸ்ஐ விடுமுறைக்கு சென்றுவிட்டதாக கூறியதால் குமாரி தனது சித்தி கங்கம்மாவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அங்குள்ள பஸ்நிலையத்தில் குமாரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ரங்கசாமி வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அதற்கு குமாரி, `உனது தொல்லை தாங்காமல்தான் போலீசில் புகார் அளிக்க சென்றேன்’ என கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ரங்கசாமி, அருகில் இருந்த இளநீர் கடைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துவந்து மனைவியின் தலை, கழுத்து, முகத்தில் சரமாரியாக வெட்டினார்.

உடன் இருந்த கங்கம்மா தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் ரங்கசாமி வெட்டினார். பட்டப்பகலில் பஸ் நிலையததில் 2 பெண்களை சரமாரி வெட்டுவதை கண்ட பொதுமக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். ஒரு சிலர் இதனை செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனிடையே ரங்கசாமி, போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதனிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரி மற்றும் கங்கம்மாவை போலீசார் மீட்டு நந்தியாலா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமாரி பரிதாபமாக இறந்தார். கங்கம்மா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ரங்கசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post நடத்தை சந்தேகத்தால் டார்ச்சர் புகார் கொடுக்கச்சென்ற மனைவி வெட்டிக்கொலை: பஸ் நிலையத்தில் கணவன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Gokulapuram ,Rangaswamy ,Auku town ,Nandiala district of Andhra Pradesh ,Kumari ,Rangasamy ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை