×

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். டெல்லி போலீஸ், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து டெல்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் கடந்த 15-ம் தேதி சோதனையில் ஈடுபட்டது. இதில் ‘மெத்தம்பெட்டமைன்’ எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தும் 50 கிலோ எடையிலான போதையூட்டும் வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அந்த கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ போதையூட்டும் வேதிப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், அவரது சகோதரரும், விசிகவை சேர்ந்தவருமான முகமது சலீம், நடிகர் மைதீன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக், முகமது சலீம் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் தேவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “சென்னை மாவட்டம், மையசென்னை மண்டல துணைச் செயலாளர் திரு அ.முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவருவதால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,Mohammad Saleem ,Liberation Tigers of India ,CHENNAI ,Mohammed Saleem ,LTTE ,Delhi Police, ,Central Narcotics Trafficking Unit ,Delhi ,Kailash Park ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...