×

கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: அச்சத்துடன் தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்கள்

தொண்டாமுத்தூர்: கோவை அருகே தனியார் பள்ளிக்கு மின்னஞ்சலில் மீண்டும் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்றனர். மேலும் பிளஸ்-1 மாணவர்கள் அச்சத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

கோவை அடுத்த வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஆசிரியர்கள், ஊழியர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து தகவல் அறிந்த வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில், சந்தேகப்படும்படி எந்த பொருளும் சிக்கவில்லை.

இதனையடுத்து மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று காலை 9,10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். அதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. பள்ளியில் வெடிகுண்டு சோதனை குறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து குழந்தைகளை அழைத்து சென்றனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடர்ந்து நடந்தது. கடந்த 2ம் தேதியும் இதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்ட மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: அச்சத்துடன் தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Goa ,Thondamuthur ,Somayampalayam ,Vadavalli ,
× RELATED கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி