×

பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது தமிழ் மொழிப்பாடம் எளிதாக இருந்தது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 25ம் தேதி முடியும்.

பிளஸ் 1 தேர்வில் 7,534 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3,89,736 பேர் மாணவர்கள், 4,30,471 பேர் மாணவியர், தனித் தேர்வர்கள் 4,945 பேர். இவர்களுக்காக 3,302 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு அறைக் கண்காணிப்பு பணியில் 46,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 1,134 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டது. மேலும் 187 சிறைவாசிகளும் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 விடைத்தாள்கள் 83 மையங்களில் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் யாரும் தேர்வுப் பணியில் ஈடுபடக்கூடாது என்று அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நிலையான பறக்கும் படையில் 1135 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 43 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். முதல் நாளான நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களை மாணவ மாணவியர் எழுதினர். பதிவு செய்தவர்களில் 9,844 பேர் தேர்வு எழுத வரவில்லை. அவர்களில் பள்ளி மாணவர்கள் 9,275 பேரும், தனித் தேர்வர்கள் 569 பேரும் அடங்குவர். முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தேர்வு அறையில் பிட் அடித்த வகையில் சேலத்தில் ஒரு மாணவரும், ராமநாதபுரத்தில் ஒரு மாணவரும் பறக்கும் படையிடம் பிடிபட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறைக்கு பறக்கும் படையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

The post பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது தமிழ் மொழிப்பாடம் எளிதாக இருந்தது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...