×

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை திருவண்ணாமலையில் பரபரப்பு செய்யாறு நிதிநிறுவனத்தால் பணமோசடி

திருவண்ணாமலை, மார்ச் 5: செய்யாறு தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள், திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் செயல்பட்டு வந்த ஏபிஆர் எனும் தனியார் நிதிநிறுவனம், பல்வேறு கவர்ச்சிகரமான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிவித்தது. அதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் பணத்தை சேமித்தனர். மேலும், தீபாவளி, பொங்கல் சேமிப்பு திட்டங்களில், ஒருசில ஆண்டுகள் முறையாக பரிசு பொருட்களை வழங்கியதால், பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, அதிக அளவில் சேமிப்பு திட்டத்தில் சேர தொடங்கினர்.

இந்த நிதிநிறுவனம் செய்யாறு மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் கிளைகளை அமைத்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துள்ளது. இந்நிலையில், திடீரென இந்த நிறுவனம் தனது அலுவலகத்தை மூடிவிட்டது. மேலும், அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். அதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தை சூறையாடினர். அதன்தொடர்ச்சியாக, நிதி நிறுவனத்தை நடத்திய அல்தாப் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும், பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை மீட்க முடியவில்லை.

எனவே, தனியார் நிதிநிறுவனத்தில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள், திருவண்ணாமலை புத்தா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட நபர்கள், தனித்தனியே புகார் மனுவும் அளித்தனர். அதைத்தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மோசடி நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை திருவண்ணாமலையில் பரபரப்பு செய்யாறு நிதிநிறுவனத்தால் பணமோசடி appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Office of the Economic Offenses Division ,Seyyar ,Economic Offenses Branch ,APR ,Seiyaru ,Tiruvannamalai district ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...