×

கெருகம்பாக்கம், தாழம்பூரில் 2வது முறையாக தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளி வளாகத்தில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு

பல்லாவரம்: கெருகம்பாக்கம், தாழம்பூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனால், பள்ளி வளாகங்களில் பெற்றோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வெடி குண்டு நிபுணர்களின் சோதனைக்கு பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது. மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், கடந்த வாரம் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஈ-மெயில் ஒன்று வந்தது. இதனால், பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு தங்களது பிள்ளைகளை அழைத்துச்சென்றனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியை சல்லடை போட்டு சோதனை செய்து பார்த்தபோது, வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்நிலையில், நேற்று காலை அதேபோன்று இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதனால், வழக்கம்போல் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பாதுகாப்பு கருதி பெரும்பாலான பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளியில் விடாமல் தங்களது கூடவே அழைத்துச் சென்றனர். ஆனால், வகுப்பறையில் இருந்த மாணவர்களின் பாடப்புத்தகம் அடங்கிய பேக் மற்றும் பள்ளி வளாகத்தில் 2வது முறையாக வெடி குண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றநிலையில், தற்போது, 2வது முறையாக அதே பள்ளிக்கு மீண்டும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வு நடந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று அடிக்கடி வெடிகுண்டு புரளி கிளப்பி வரும் மர்ம நபர்களால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரும் தற்போது நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூர்: சென்னை அருகே தாழம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் பள்ளியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 1ம்தேதி பள்ளி வளாகத்தில் குண்டு வைத்திருப்பதாக மின் அஞ்சல் மூலமாக தகவல் வந்திருப்பதாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று நேற்று 2வது நாளாக அதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் தகவல் கிடைத்தது. உடனடியாக பள்ளி நிர்வாகம் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம், தாழம்பூர் காவல் நிலையம் போன்றவற்றுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கேளம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் வெங்கடேசன், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் அங்கு சென்று குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

பின்னர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனிடையே சென்னையில் உள்ள பள்ளிகளிலும் இதுபோன்ற வெடிகுண்டு புரளி பரவியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கெருகம்பாக்கம், ,தாழம்பூர் பள்ளியிலும் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் வெறும் புரளி என்றும் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

The post கெருகம்பாக்கம், தாழம்பூரில் 2வது முறையாக தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளி வளாகத்தில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thalampur ,Pallavaram ,Kerugampakkam ,Kerugambakkam ,Thalambur ,Dinakaran ,
× RELATED கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின்...