×

எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் தமிழ்நாட்டை ஒன்றுமில்லாமல் செய்வதே மோடியின் திட்டம்: திருவள்ளூரில் வாகை சந்திரசேகர் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரச் செயலாளர், நகரமன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். நகர நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரவி, பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், சம்பத்ராஜா, குப்பன், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

மேலும் தமிழ்நாடு இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:- தமிழ்நாடுக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்க கூடாது என்பதுதான் மோடியின் திட்டம். தமிழ்நாட்டை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவதே அவரது திட்டமாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.63 ஆயிரம் கோடி தர வேண்டும். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்குவதைவிட குறைந்த அளவே தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. உதயநிதி ஸ்டாலினால் தற்போது மற்ற நடிகர்களும் அரசியலுக்கு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏவாகி அமைச்சர் ஆனவர். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள், போனார்கள். ஆனால் யாரும் நிற்கவில்லை.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த பிரதமரை தமிழர் பண்பாட்டின்படி நமது முதலமைச்சர் வரவேற்றார். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த தொகுதி எம்பி கனிமொழி பெயரைக் கூட உச்சரிக்காதது அவரது பண்பை வெளிக்காட்டுகிறது. நடிகர் விஜயகாந்த் எவ்வளவு விமர்சித்து இருந்தாலும் அவரது மறைவு செய்தி கேட்டு முதல் நபராக நின்று ஆறுதல் சொன்னவர் நமது முதல்வர். அதேபோல் சீமானும் கலைஞரையும், நமது முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இருப்பினும் அவரது தந்தை மறைவிற்கு முதல் ஆளாக தொலைபேசியில் ஆறுதல் சொன்னதும் நமது முதல்வர்தான். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர். இது கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு பேசினார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், ஆதிசேஷன், குமரன், சிட்டிபாபு, ஆதாம், கிஷோர், ஒன்றியச் செயலாளர்கள் மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முனுசாமி, சுரேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

The post எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் தமிழ்நாட்டை ஒன்றுமில்லாமல் செய்வதே மோடியின் திட்டம்: திருவள்ளூரில் வாகை சந்திரசேகர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Vagai Chandrasekhar ,Tiruvallur Tiruvallur ,Thiruvallur ,city ,DMK ,Chief Minister ,M.K.Stal ,City Secretary ,City Council ,Vice President ,Ravichandran ,District Deputy Secretary ,Tamil ,Nadu ,Tiruvallur ,
× RELATED மக்கள் பணத்தில் ஒரு நாளைக்கு ₹1.50 கோடி ஆடை: ‘மோடி என்னை விட சிறந்த நடிகர்’