×

நோயால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை: தனி இடத்தில் குட்டி யானைக்கு கவனிப்பு

சத்தியமங்கலம்: பண்ணாரி வனப்பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பிறந்து 2 மாதமே ஆன குட்டி யானையை, தனி இடத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டு யானைகள் அவ்வப்போது சாலையோர வனப்பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட பவானிசாகர்-பண்ணாரி சாலையில் உள்ள பள்ளத்திற்கு கிழக்கு வனப்பகுதியில் பெண் யானை உடல்நலக்குறைவால் எழுந்திருக்க முடியாமல், படுத்திருப்பதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், நோயால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது பிறந்த 2 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை தன் தாய் யானையை பார்ப்பதற்காக அதே பகுதியில் சுற்றி வந்ததால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குட்டி யானையை தாய் யானை அருகே வராதபடி தடுத்து பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு குளுக்கோஸ் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்பணி நடந்து வருகிறது. மேலும் யானை தீவனம் உட்கொள்வதற்காக வைக்கோல் மற்றும் பச்சை தீவனம் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குட்டி யானைக்கு லாக்டோஜன் திரவ உணவு வழங்கப்படுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் சுதாகர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தாய் யானை இறக்கும் பட்சத்தில் குட்டி யானையை மற்ற யானைகள் கூட்டத்தில் சேர்ப்பது அல்லது குட்டி யானையை முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

The post நோயால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை: தனி இடத்தில் குட்டி யானைக்கு கவனிப்பு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Pannari forest ,Erode District ,Sathyamangalam Tiger Reserve forest ,Dinakaran ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...