×

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

சென்னை: ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற ஒன்றிய அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய மின்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலையில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. ஆளும் கட்சியான பாஜகவை வீழ்த்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக இந்த கூட்டணியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதன்படி, அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பாஜ கூட்டணியில் இருந்த அதிமுக விலகி சென்றது. பாஜக தனித்து போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த கட்சிகள் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் கூட்டணியை ஏற்படுத்த முடியாமல் திணறி வருகிறது. தமாகா உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. வேறு வழியில்லாத சூழ்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டார். ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வராதது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே நேரம் இயற்கை பேரழிவுகளுக்கான நிதி உதவியை தமிழக அரசு ஒன்றிய பாஜ அரசிடம் கேட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படாததும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்து சென்றார். 3வது முறையாக இரண்டு நாள் பயணமாக கடந்த 27ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற மோடி, நிறைவாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுபேசினார். இந்நிலையில், இந்த ஆண்டில் 4வது முறையாக பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். இதற்காக இந்திய விமானப்படை தனி விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மதியம் 1.15மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு பாஜகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடனடியாக அவர் பிற்பகல் 2.50 மணிக்கு, இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு கல்பாக்கம் சென்றடைகிறார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற ஒன்றிய அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது, 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்து அவற்றை பார்வையிடுகிறார். பிரதமர் வருகையையொட்டி கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்காக வடக்கு மண்டல ஐஜி நேரத்திரன் நாயர் தலைமையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 10 வெடிகுண்டு சோதனைக் குழு, 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோரப் படை மூலம் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் மாலை 4.30 மணிக்கு கல்பாக்கத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் விமானநிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பாஜ கூட்டணியில் இணைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோர் மட்டும் கலந்து கொள்கின்றனர். இதை தொடர்ந்து, பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலிருந்து காரில் புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக மாலை 6.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், பிரதமர் மோடி மாலை 6.35 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பட் விமான நிலையம் சென்றடைகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி லாட்ஜ்கள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு சோதனையை தீவிரப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்திருந்தனர்.

மேலும், மதியம் 12 முதல் இரவு 8 மணிவரை முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மத்திய கைலாஷ் முதல் ஹல்டா ஜங்ஷன் வரை, இந்திராகாந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா வரை, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமபுரத்தில் இருந்து கத்திப்பாரா வரை, அசோக்பில்லரில் இருந்து கத்திபாரா வரை, விஜயநகர் சந்திப்பில் இருந்து கான்கோர்டு சந்திப்பு கிண்டி வரை, அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் வரை, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை பிரதமர் வருகையின் போது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஈனுலை தொடக்கப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் விளக்கினார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சென்னை நந்தனம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

The post சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nandanam Y. M. ,C. A. ,PM Modi ,BJP ,Coalition Parties ,Maidan ,Modi ,Union Government Ceremony ,Kalpakkam Nuclear Power Station ,Chengalpattu district ,Nandanam ,YMCA ,Chennai Nandanam Y. M. ,General Meeting ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...