×

முன்விரோத தகராறில் வாலிபரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நேற்று வீட்டில் இருந்த தனியார் நிறுவன ஊழியரை முன்விரோத தகராறு காரணமாக 4 பேர் கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (21). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று விடுமுறை என்பதால் சக்திவேல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து சக்திவேலை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சக்திவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர்கள் 4 பேரும் காய்லர்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், சக்திவேலுக்கும் இந்த 4 பேர் கும்பலுக்கும் இடையே பெண் விவகாரம் அல்லது வேறு ஏதேனும் முன்விரோத தகராறு காரணமாக அரிவாளால் வெட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கும்பலை வலைவீசி தேடி வருவதுடன், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post முன்விரோத தகராறில் வாலிபரை சரமாரியாக வெட்டிய 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...