×

மாவட்டத்தில் 777 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 

ஊட்டி,மார்ச்4: நீலகிரி மாவட்டத்தில் 777 மையங்களில் 59 ஆயிரத்து 132 குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை முற்றிலும் குணப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. குன்னூர் ரயில் நிலையம் எதிரே சாமன்னா பூங்கா அருகே மாவட்ட கலெக்டர் அருணா கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.  சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகள் என மொத்தம் 59 ஆயிரத்து 132 குழந்தைகளுக்கு இன்று (நேற்று) போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்,அங்கன்வாடி மையங்கள்,பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம் மற்றும் வழிபாட்டு தலங்கள், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடி, சுற்றுலா தளங்கள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுபடும் குழந்தைகளை கண்டறிந்து அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பார்வையிட்டு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 777 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.

Tags : Polio ,Drip Camp ,centers ,Ooty ,Nilgiri district ,camp ,Dinakaran ,
× RELATED வாக்கு சாவடி பகுதியில் சட்டம் ஒழுங்கு...