×

மதுரையில் ஒற்றை செங்கல்லுடன் இருக்கிறது ஒன்றிய அரசு விரைந்து எய்ம்ஸ் அமைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: டெல்டா மாவட்ட மக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் வகையில் ரூ.254.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 700 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனையை நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்புகளையும், குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்புகளையும், திறந்து வைக்கிறார். மேலும் ரூ.87 கோடி மதிப்பீட்டிலான ஆவடி, அம்மாபேட்டை, கண்டியப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் விரைவில் திறந்து வைக்க உள்ளார். ஜப்பானின் ஜைக்கா நிறுவன நிதி பங்களிப்பு உடன் பல்வேறு திட்டங்கள், வசதிகள் தமிழ்நாட்டில் முடிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஜப்பானின் ஜைக்கா நிறுவன நிதி பங்களிப்பு உடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து 2019ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார் இன்றும் அது ஒரு செங்கலுடன் இருக்கிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக மரம் உள்ளதா.

15 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் காட்டியது ஒன்றிய அரசு தான் மரங்களை எடுக்காமல் அதை கட்டினார்களா? மரங்களை எடுக்கவில்லை, நிலம் கையகப்படுத்தவில்லை என்று கூறுகின்றனர். நிலம் கையகப்படுத்தாமல் அன்றைய முதல்வர் எடப்பாடி எப்படி பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டலாம். எனவே குழந்தைத்தனமான காரணங்களை கூறாமல் ஒன்றிய அரசு விரைந்து எம்ய்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மதுரையில் ஒற்றை செங்கல்லுடன் இருக்கிறது ஒன்றிய அரசு விரைந்து எய்ம்ஸ் அமைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,AIIMS ,Madurai ,Minister ,M. Subramanian Kattam ,Chennai ,M. Subramanian ,Special Intensive Polio Drops Camp ,Saitappettai Five Lamp Area ,Kodambakkam Zone, Chennai ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...