×

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை சென்றார்: ரூ.114 கோடியில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை திறக்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார். அங்கு இன்று ரூ.114 கோடியில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி கடந்த 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.114.48 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றார். முன்னதாக எழும்பூரில் ரயில் நிலையத்தில் அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு நேற்றிரவு 8.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர், திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். அங்கிருந்து காரில் மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதைதொடர்ந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னை வந்தடைகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெரும்பாலும் கட்சி பணி, திரைப்பட பணி, வெளியூரில் நடக்கும் அரசு விழா எந்த நிகழ்ச்சியாயினும் ரயில் பயணத்தையே தேர்வு செய்வார்.

அதேபோல், மு.க.ஸ்டாலினும் முதல்வராக பொறுப்பேற்ற பின் கடந்த 2022 டிச.7ம் தேதி முதல்முறையாக தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க ரயிலில் சென்றிருந்தார். அதன்பின் கடந்தாண்டு பிப்.1ம் தேதி வேலூருக்கு ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் பயணம் மேற்கொண்டார். அதேபோல், கடந்தாண்டு செப்.16ம் தேதி முப்பெரும் விழாவில் பங்கேற்க காட்பாடிக்கு ரயில் பயணம் மேற்கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றபின் இப்படி பல்வேறு முறை ரயிலில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை பயணத்துக்கும் ரயிலையே தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

The post திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை சென்றார்: ரூ.114 கோடியில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை திறக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Mayiladuthurai ,Tiruchendur Express ,Chennai ,38th district ,Tamil Nadu ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்