×

பாஜக 195 வேட்பாளர்களை அறிவித்த நிலையில் விரைவில் 100 வேட்பாளர்களை அறிவிக்கிறது காங்கிரஸ்: பிரியங்கா, ராகுல் போட்டியிடும் தொகுதி எது?

புதுடெல்லி: பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் விரைவில் 100 வேட்பாளர்களை அறிவிக்கிறது. பிரியங்கா, ராகுல் போட்டியிடும் தொகுதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், நேற்று பாஜக தனது முதல் கட்ட 195 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். 195 வேட்பாளர்களில் 28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உத்தர பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சட்டீஸ்கரில் 11, தெலங்கானாவில் 9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதால், நாட்டில் தேர்தல் பிரசாரம் அடுத்தடுத்த நாட்களில் சூடுபிடிக்க தொடங்கும். இன்று நடைபெறும் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஒன்றிய அமைச்சர்கள் விரைவில் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் வேலைகளை கவனிப்பார்கள். பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. இந்த வாரம் 100 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிடவுள்ளது.

சர்ச்சைகளில் சிக்காத மற்றும் சிட்டிங் எம்பிக்கள் போட்டியிடும் தொகுதிகளை முதலில் அறிவிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது. ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவாரா? என்பதும், கடந்த தேர்தலை போன்று இந்த தேர்தலிலும் தனது பாரம்பரிய அமேதி தொகுதியில், பாஜக வேட்பாளரும் மூத்த அமைச்சருமான ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிடுவாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

41 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா: பாஜகவின் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலில் 41 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. அதாவது தோராயமாக 27 சதவீத வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பார்த்தால் மத்தியப் பிரதேசத்தில் 11 ெதாகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். குஜராத்தில் 5 சிட்டிங் எம்பிகளுக்கும், ஜார்கண்ட் 2 சிட்டிங் எம்பிக்களுக்கும், ராஜஸ்தானில் 5 எம்பிக்களுக்கும், திரிபுரா ஒரு சிட்டிங் எம்பிக்கும், உத்தரபிரதேசத்தில் ஒரு சிட்டிங் எம்பிக்கும், டெல்லியில் 4 சிட்டிங் எம்பிக்களுக்கும், சட்டீஸ்கரில் 7 எம்பிக்கள் என 41 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்படவில்லை.

The post பாஜக 195 வேட்பாளர்களை அறிவித்த நிலையில் விரைவில் 100 வேட்பாளர்களை அறிவிக்கிறது காங்கிரஸ்: பிரியங்கா, ராகுல் போட்டியிடும் தொகுதி எது? appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Priyanka ,Rahul ,New Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...