×

அறிமுகம் இல்லாத பெண்களை ‘செல்லம்’ என்று அழைப்பது பாலியல் குற்றம்: கொல்கத்தா ஐகோர்ட்

கொல்கத்தா: அறிமுகம் இல்லாத பெண்களை ‘செல்லம்’ என்று அழைப்பது பாலியல் குற்றமாகும் என்று பெண் கான்ஸ்டபிள் வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேற்குவங்க மாநில காவல்துறையின் போக்குவரத்து பெண் போலீஸ்காரர் ஒருவர், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஒன்றை குடிபோதை வாலிபர் ஓட்டி வந்தார். அந்த வாகனத்தை பெண் போக்குவரத்து போலீஸ்காரர் வழிமறித்து விசாரித்தார்.

அப்போது அந்த வாகன ஓட்டி, ‘என்ன செல்லம், எனக்கு அபராதம் விதிக்க போகிறீர்களா? என்று கிண்டலாக கேட்டார். அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ்காரர், அந்த நபரின் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலும் ஒரு குற்றவியல் வழக்கும் பதிவு செய்தார். இவ்வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட வாகன ஓட்டிக்கு, மூன்று மாத சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து தீர்ப்பாளித்தது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாகன ஓட்டி மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அறிமுகம் இல்லாத பெண்களை செல்லம் என்று அழைப்பதும் பாலியல் குற்றமாகும். குடிபோதையில் சாலையில் கூச்சலிட்டுக் கொண்டு வாகனம் ஓட்டி வந்ததும், பெண் கான்ஸ்டபிளை ‘செல்லம’ என்று அழைத்ததும், ஐபிசியின் 354 ஏ மற்றும் 509 பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொது இடத்தில் இதுபோன்று பெண்ணை அழைப்பது மிகவும் மோசமானது. இந்த செயலை போதையில் இல்லாமல் செய்திருந்தால், அதன் நோக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். விசாரணை நீதிமன்றம் அளித்த மூன்று மாத சிறை தண்டனையை, ஒரு மாதமாக குறைத்து தீர்ப்பளிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுள்ளது.

The post அறிமுகம் இல்லாத பெண்களை ‘செல்லம்’ என்று அழைப்பது பாலியல் குற்றம்: கொல்கத்தா ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Kolkata High Court ,Kolkata ,West Bengal State Police ,
× RELATED சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும்...