×

மைவி3 ஆட்ஸ் நிறுவனர் விஜயராகவன் கைது: ₹20 ஆயிரம் கோடி மோசடி குறித்து விசாரணை

கோவை: மதுரையை சேர்ந்தவர் விஜயராகவன் (48). இவர் சில ஆண்டிற்கு முன் போகர் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தை துவக்கினார். பின்னர் வி-ராஸ் என்ற நிறுவனத்தையும், வி3 ஆன்லைன் டிவி போன்றவற்றையும் நடத்தி வந்துள்ளார். மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற அடிப்படையில் இந்த நிறுவனங்களை இவர் நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலமாக இவர் பல லட்சம் பேரிடம் முதலீடுகளை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் இவர் மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளார். பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனத்தில் இருந்து இவர் விலகி விட்டார்.

இவருக்கு பிறகு இவரின் கூட்டாளியான கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சக்தி ஆனந்தன் (43) என்பவர் இந்த நிறுவனத்தின் உரிமையாளராக தொடர்ந்துள்ளார். சக்தி ஆனந்தன் மீதும், மைவி3 ஆட்ஸ் மீதும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மைவி 3ஆட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் வருமானம் கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்துள்ளனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ₹20 ஆயிரம் கோடிக்கு மேல் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை போலீசார் நடத்திய விசாரணையில் சக்தி ஆனந்தன் உள்பட பலர் இந்த மோசடியில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் மைவி3 நிறுவனத்தை உருவாக்கிய விஜயராகவன் போலியான டாக்டர் பட்டத்தை பெற்று மோசடி செய்திருப்பதாக தெரியவந்தது. அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கியபோது இவர் போலியான டாக்டர் பட்டம் காட்டி அதை வைத்து பெரும் முதலீடுகளை குவித்திருப்பதாக தெரிகிறது. இதனடிப்படையில் மதுரை சென்ற கோவை போலீசார் நேற்று முன்தினம் இரவு விஜயராகவனை கைது செய்ய முயன்றனர். அப்போது நெஞ்சு வலிப்பாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு இவரது ஆதரவாளர்கள் குவிந்ததால் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோவை போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் விஜயராகவன் சிறைக்கு செல்ல மறுத்து சிகிச்சை தேவை, மருத்துவமனைக்கு போக வேண்டும் என போலீசாரிடம் தொடர்ந்து அடம் பிடித்துள்ளார். ஆனால், போலீசார் இவரின் நடிப்பை நம்பாமல் தொடர்ந்து விசாரித்தனர்.

கோடிகளை குவித்த குருஜி
மைவி3 வட்டாரங்களில் விஜயராகவன் குருஜி என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் எங்கு சென்றாலும் தான தர்மம் செய்வாராம். அதை விட அதிகமாக முதலீடு பெறுவாராம். 7 ஆண்டிற்கு முன்ேப இவர் ஏராளமான கோடிகளை குவித்து விட்டதாக தெரிகிறது. விஜயராகவன் தாய்லாந்து, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று உல்லாசமாக இருப்பது வழக்கம். இவர் மொரிசியசில் தனித்தீவு வாங்கியுள்ளதாக தெரிகிறது. இவர் உறவினர்கள் மோசடி தொடர்பு குறித்தும் விசாரணை நடக்கிறது. விஜயராகவன் போலியாக டாக்டர் பட்டம் பெற்றதுடன் மேலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளதாக தெரிகிறது.

The post மைவி3 ஆட்ஸ் நிறுவனர் விஜயராகவன் கைது: ₹20 ஆயிரம் கோடி மோசடி குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : MyV3 ,Vijayaraghavan ,Coimbatore ,Madurai ,Poker Health Care ,V-Rass ,V3 Online TV ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை கண் அசைவால் போதையில் வாலிபர்கள் தாக்குதல்