×

பணம் கேட்டு தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய விவகாரம்: அதிமுக நிர்வாகியை பிடிக்க புதுச்சேரி விரைந்த தனிப்படை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய விவகாரத்தில் அதிமுக நிர்வாகியை பிடிக்க தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்தனர். மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக உள்ளவர் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டதாக புகார் எழுந்தது. ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜ மாவட்ட தலைவர் அகோரம், செய்யூரை அதிமுக வழக்கறிஞர் அணி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டு விட்டதாக விருத்தகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் புதுச்சேரியில் தலைமறைவாக உள்ளதாக மயிலாடுதுறை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

பாஜகவை கண்டித்து போஸ்டர்கள்
தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்ட தலைவர் உட்பட பலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் உட்பட புறநகர் பகுதியில் சைவநெறி கழகத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில்,‘ஆபாச வீடியோ தயாரித்து மரியாதைக்குரிய தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த பாஜவை சார்ந்தவர்களை கண்டிக்கிறோம்,’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பணம் கேட்டு தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய விவகாரம்: அதிமுக நிர்வாகியை பிடிக்க புதுச்சேரி விரைந்த தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,AIADMK ,Mayiladuthurai ,Darumapuram ,Atheenam ,27th ,Guru ,Dharumapuram Atheenam ,Masilamani ,Desika Gnanasampanda ,Paramasarya Swami.… ,Dharumapuram ,forces ,
× RELATED மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக...