×

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை: சென்னையில் உள்ள கட்டுமான மற்றும் கிரானைட் நிறுவனங்கள், கெமிக்கல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் குறிப்பாக பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்தது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ஆதாரங்களை திரட்டும் வகையில் நேற்று சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பிரபல கட்டுமான நிறுவனமான நவீன் பில்டர்ஸ் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை திருவான்மியூர் காமராஜர் சாலையில் கலாதிமிகா, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் உரிமையாளர் நவீன் என்கிற விசுவஜித் வீட்டில் மூன்று பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். கோட்டூர்புரத்தில் உள்ள பிரபல கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணு வீடு மற்றும் தி.நகரில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணியம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தி.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள கெமிக்கல் நிறுவனத்திலும், தி. நகரில் செயல்படும் அயரா கன்ஸ்ட்ரெக்சனிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள், வணிக ஆவணங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Chennai ,Perampur ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...