×

பெயர், கொடி பயன்படுத்த தடை கோரி மஜக வழக்கு: தமீமுன் அன்சாரி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் அதன் தலைவர் டி.கே.பஷீர் அகமது தாக்கல் செய்துள்ள மனுவில், கட்சியின் நிறுவன தலைவராக உள்ளேன். எங்கள் கட்சி கடந்த 2016 முதல் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற கட்சி. எங்கள் கட்சியில் எம்.தமீமுன் அன்சாரி பொதுச் செயலாளராக இருந்தார். உரிய பங்களிப்பை வழங்காததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். உட்கட்சி தேர்தல் நேரத்தில் கொரோனா பாதிப்பு வந்ததால் 2022 டிசம்பர் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நான் தலைவராகவும், துணை தலைவராக சையத் மகபூ சுபானியும், பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.ஹாருண் ரசீத்தும், பொருளாளராக என்.ஏ.திமியாவும் தேர்வு செய்யப்பட்டோம்.

இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தமீமுன் அன்சாரி தனது தலைமையில் செயற்குழு 2022 அக்டோபர் 8ல் கூட்டப்பட்டதாகவும் 2022 டிசம்பர் 24ம் தேதி பொதுக்குழு கூட்டப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அதில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொதுக்குழு எதுவும் கூட்டப்படவில்லை என்று தேர்தல் அதிகாரிக்கு எங்கள் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டது. உறுப்பினராக இல்லாத தமீமுன் அன்சாரி போலிஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து தன்னை தலைவராக தெரிவித்து வருகிறார். சட்டவிரோதமாக கட்சியின் பெயர், லெட்டர் பேடு, கொடி ஆகியவற்றையும் பயன்படுத்தி வருகிறார். அவற்றை பயன்படுத்த தமீமுன் அன்சாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார். பின்னர் மனுவுக்கு தமீமுன் அன்சாரி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post பெயர், கொடி பயன்படுத்த தடை கோரி மஜக வழக்கு: தமீமுன் அன்சாரி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Majaka ,Court ,Tamimun Ansari ,Chennai ,Chennai High Court ,Humanity Democratic Party ,Majka ,TK Basheer Ahmed ,Majak ,Dinakaran ,
× RELATED இந்தியா முழுவதும் ராகு காலம் முடிந்து:...