×

ஒகேனக்கல் வனப்பகுதிக்கு தினமும் தண்ணீர் தேடி வரும் ஒற்றை யானை: போக்குவரத்தை நிறுத்தி அனுப்பும் வனத்துறையினர்

தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டியில், ஒற்றை யானை தினமும் தண்ணீர் குடித்துவிட்டு செல்கிறது. யானை வந்து செல்வதற்காக, வனத்துறையினர் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை நிறுத்தி அனுப்பி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், 35 சதவீதத்திற்கும் மேல் வனப்பகுதி உள்ள மாவட்டமாகும். தர்மபுரி மாவட்ட வனப்பகுதிக்கு கர்நாடகா வனப்பகுதியில் இருந்து சூளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக ஏராளமான யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். பென்னாகரம் அருகே கோடுபட்டி, பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள், மான்கள், சிறுத்தைகள் வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. தற்போது கோடை காலம் துவங்கியதால் மேய்ச்சல் நிலம் காய்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கோடுபட்டி பகுதியில் இருந்து கடந்த ஒரு மாதமாக சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒற்றை யானை தினமும் பகல் நேரத்தில் ஒகேனக்கல் மெயின் சாலையை கடந்து ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் சென்று, வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பும் தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் ஒகேனக்கல் மெயின் ரோட்டை மீண்டும் கடந்து கோடுபட்டி பகுதிக்கு செல்வது வழக்கமாக உள்ளது. நேற்று பகல் 2 மணி அளவில் ஒற்றை யானை ஒகேனக்கல் வனப்பகுதியில் முண்டச்சிபள்ளம் அருகே ஒகேனக்கல் வனச்சாலையை கடந்து சென்றது. ஒற்றை யானை தினமும் வந்து செல்வதால் யானை வந்து செல்வதற்கு பொது மக்களால் எந்த இடையூறும் ஏற்படாதவாறு இருக்க பகல் நேரத்திலும் மாலை நேரத்திலும் யானை சாலையை கடக்கும் வரை வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் யானை அருகே சென்று விடாதபடி எச்சரிக்கையாக பொதுமக்களை சாலையை கடக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். ஒகேனக்கல் மெயின் ரோட்டில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால், எச்சரிக்கையுடன் அந்த பகுதியில் சென்று வருகின்றனர்.

 

The post ஒகேனக்கல் வனப்பகுதிக்கு தினமும் தண்ணீர் தேடி வரும் ஒற்றை யானை: போக்குவரத்தை நிறுத்தி அனுப்பும் வனத்துறையினர் appeared first on Dinakaran.

Tags : Okanekal forest ,Dharmapuri ,Okanakal Forest ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...