×

சுற்றுலா பயணிகளின் கேம்ப் பயரால் பினந்தின்னி கழுகுகள் இனபெருக்கம் செய்வதில் தோல்வி: ஆராய்ச்சியாளர் தகவல்

ஊட்டி: சுற்றுலா தொடர்பான கேளிகை நடவடிக்கைகளால் ஏற்படும் சிறு இடையூறுகள் கூட நீண்ட அலகு பினந்தின்னி கழுகு கூடு கட்டி இனபெருக்கம் செய்வதில் தோல்வியை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள நீண்ட அலகு பினந்தின்ணிக் கழுகுகளின் எண்ணிக்கை மூன்று இனப்பெருக்க காலங்களில்(2018 முதல் 2021 வரை) நான்கு கூடு கட்டும் பகுதிகளை முறையாக கண்காணித்து ஆராய்ச்சியாளர்கள் மணிகண்டன்,பைஜு மற்றும் கண்ணன் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியாவில் வெளியாகும் ஜார்னல் ஆப் திரெட்டன் டாக்சா (Journal of threatened Taxa) இதழில் வெளியானது. இக்கட்டுரை ஆசிரியர்களில் ஒருவரான பினந்தின்ணிக் கழுகு ஆராய்ச்சியாளர் மணிகண்டன் கூறுகையில், மாயார் ஆற்றின் குறுக்கே உயர்ந்து நிற்கும் பாறை முகடுகளில் கூடுகளை அமைக்க விரும்பும் நீண்ட அலகு பினந்தின்னிக் கழுகுள் கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு கூடு கட்டும் இடத்தின் வெற்றி தோல்விகள் பதிவு செய்யப்பட்டன. நீண்ட அலகு பினதிண்ணிக் கழுகுகளின் இனபெருக்க வெற்றி விகிதமானது ஏற்ற தாழ்வாகவே இருந்தது, மேலும் ஒரு சட்டவிரோத தங்கும் விடுதி செயல்பாடு எப்பநாடு கூடுகட்டும் நீண்ட அலகு பினந்தின்னிக் கழுகுகளின் இனபெருக்கதை பாதிக்கிறது என்பது ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. 2018ல் இரண்டு கூடுகளைக் கொண்டிருந்த எப்பநாடு நெஸ்டிங் காலனி, அடுத்த ஆண்டு ஒரே கூடாக குைறந்துள்ளது.

இதற்கு பெரும்பாலும் சுற்றுலா சார்ந்த செயல்பாடு காரணமாக இருக்கலாம். அருகிலுள்ள தங்கும் விடுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் கழுகு கூட்டின் அருகில் சென்று அடிக்கடி இடையூறு ஏற்படுத்தியது, பறவைகள் கூடு கட்டும் இடத்தை விட்டு வெளியேற ஒரு காரணமாக இருக்கலாம். கூடு கட்டும் காலனியில் இருந்து 100-150 மீ தொலைவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒரு தங்கும் விடுதி இருந்து சுற்றுலா பயணிகள் பகலில் கூடின் அருகில் கூச்சலிடுவதையும், இரவில் கேம்ப் பயர் எனப்படும் தீ மூட்டியதையும் போடுவதையும் நாங்கள் கவனித்தோம். இந்த தங்கும் விடுதி மூடப்பட்ட பிறகு, 2020-2021ம் ஆண்டில் எப்பநாட்டில் உள்ள கூடுகளின் எண்ணிக்கை மீண்டும் இரண்டாக அதிகரித்தது என்றார். குன்றின் முகப்பு பகுதிகள் மற்றும் பாறைப் பிளவுகளில் கூடு கட்டுவதில் நீண்ட அலகு பினந்தின்னி கழுகு மிகவும் விருப்பம் கொண்டவை. இந்த மிகக் குறைந்த கூடு கட்டும் தளங்களைப் பாதுகாப்பது இப்பகுதியில் உள்ள உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலாவை விட அச்சுறுத்தலானது காட்டுத் தீயின் தாக்கம் ஆகும். 2019ம் ஆண்டு கொடநாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக நீண்ட அலகு பினதின்னி கழுகுளின் வீழ்ச்சி உண்மையாகியுள்ளது.

இந்த காட்டு தீயால் அப்பகுதியில் கூடு கட்டி இனபெருக்கம் செய்வதை கழுகுகள் கைவிட்டன. மேலும் கல்லாம்பாளையம் கூடு கட்டும் காலனியில் 2020-2021ல் 100 சதவீதம் இனப்பெருக்க வெற்றியடைந்துள்ளது. ஏனென்றால் ஆய்வின் போது கூடு கட்டும் பகுதிக்கு அருகில் மனிதர்கள் இடையூறு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, காட்டுத் தீ இல்லை, இதனால் இந்த வெற்றி சாத்தியமானது. இருப்பினும் கருவென்றாயன் மலை கூடு கட்டும் காலனியில் 2020 டிசம்பர் மாதம் ஒரு கூடு இருந்தது. ஆனால் 2021 ஜனவரி மாதம் அந்த கூட்டில் பறவைகள் இல்லை. அதன் பின்பு அருகில் உள்ள கிராமங்களில் சென்று ஆய்வு நடத்தியபோது 5 பினதின்னி கழுகுகள் இறந்து கிடந்ததை பார்த்ததாக அருகில் ஊர்மக்கள் தெரிவித்தனர். வேட்டையாடப்பட்ட கால்நடைகளில் மீது வன்மம் காரணமாக வன விலங்குகளுக்கு எதிராக விஷம் தடவுவது மற்றும் பினந்தின்ணிக் கழுகுகளுக்கு கேடு விளைவிக்கும் வலி நிவாரணிகள் கால்நடைகளுக்கு பயன்படுத்த பரவலாகக் கிடைக்கின்றன என்பதற்கான மறைமுக சான்றுகள் இருந்தன.

மேற்கண்ட காரணங்களால் அந்த 5 கழுகுகளும் இறந்திருக்க வாய்ப்புள்ளது.காட்டுத்தீ மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,கழுகுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வலி நிவாரணிகள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துதல், இறந்த கால்நடைகளின் உடலில் விஷம் தடவுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் மின் உள்கட்டமைப்பினால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை பினந்தின்னி கழுகுகள் பாதுகாப்பு மண்டலம் திட்டத்தின் மூலம் ( 100 கி.மீ சுற்றளவு) எடுத்து நீண்ட அலகு பினந்தின்னி கழுகுகளை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க வேண்டும் என்றார். மற்றொரு ஆராய்ச்சியாளர் பைஜூ கூறுகையில்: நான்கு கூடு கட்டும் தளங்களில் ஒன்று அல்லது இரண்டு கூடுகளை மட்டுமே கொண்டிருந்ததாக கூறினார். ஒரு கூடு இழப்பு அதிகம் இல்லை என்றாலும், நீண்ட அலகு பினந்தின்னி கழுகு இனப்பெருக்கம் எண்ணிக்கை மிகவும் சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு கூடும் முக்கியம். இவ்வாறு பைஜூ கூறினார்.

 

The post சுற்றுலா பயணிகளின் கேம்ப் பயரால் பினந்தின்னி கழுகுகள் இனபெருக்கம் செய்வதில் தோல்வி: ஆராய்ச்சியாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris Biosphere Reserve… ,
× RELATED நீலகிரி உயிர்கோள இயற்கை பூங்காவை...