×

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழா… ஜாம் நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து; வலுக்கும் கண்டனம்!

குஜராத்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் உள்ளூர் முதல் உலக பிரபலங்கள் வரை 2000 பேர் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் உலக பணக்காரருமான முகேஷ் அம்பானி,நீட்டா அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானி இவருக்கும் என் கோர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மகள் ராதிகா மெர்சென்ட்டிற்கும் வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதையடுத்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதல் நாளான நேற்று ஜாம்நகரில் துவங்கிய திருமண வைபவங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் திருடியுள்ளது. விழாக்கோலம் பூண்டுள்ள ஜாம்நகரில் உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை குவிந்துள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பேர்க், இவங்கா ட்ரம்ப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து ஜாம் நகருக்கு விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விருந்தினர்களை அழைத்து வருவதற்காக நியூயார்க், லாஸ் ஏஞ்செல்ஸ், லண்டன், பாரீஸ், இத்தாலி, கத்தார், பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சர்வதேச விமானங்கள் ஜாம் நகருக்கு வருகின்றன. இதனால் ஜாம் நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து பெற்றுள்ளது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவை ஒட்டி, குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் (பிப்.25 – மார்ச் 5) ‘சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை ஒன்றிய வழங்கியுள்ளது. உலகின் முன்னணி தொழிலதிபர்களும் பிரபலங்களும் வருவதற்கு வசதியாக சர்வதேச அந்தஸ்து. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டுமே 140 விமானங்கள் வருகை புரிந்துள்ளன.

இதனிடையே 10 நாள் நடக்கும் அம்பானி இல்ல விழாவுக்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதி வழங்குவதா? என மக்களவை எம்.பி.மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச தகுதி வழங்கவில்லை. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

The post தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழா… ஜாம் நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து; வலுக்கும் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Mukesh Ambani ,Jamnagar Airport ,GUJARAT ,Jamnagar ,Reliance Industries ,Nita Ambani ,Dinakaran ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...