×

பருத்தி விலை ஏற்றம் காரணமாக நூற்பாலைகள் பீதி அடைய வேண்டாம்

 

கோவை, மார்ச் 2: தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள நூற்பாலைகள் பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தர வகைகளை சேர்ந்தது. இவை, நாட்டின் ஒட்டுமொத்த நூற்பு திறனில் 85 சதவீத்திற்கும் அதிகமான நூற்பு திறனை கொண்டுள்ளன.

நடப்பு மூலதனத்திற்கான அதிக வட்டி விகிதம் மற்றும் 25 சதவீத மார்ஜின் பணம் காரணமாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருத்தி சீசனின் உச்சகாலத்தில், அதிக காலத்திற்கு பருத்தியை கொள்முதல் செய்து வைப்பதில் அடிக்கடி நெருக்கடியை இந்த ஆலைகள் சந்தித்து வருகின்றன. அரசு பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொண்டாலும், பருத்தி விலையை செயற்கையாக உயர்த்துவது வழக்கமான அம்சமாகிவிட்டது.

பருத்தி விலை நிர்ணய சிக்கலை தீர்க்க, மூலப்பொருளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விரிவான “தேசிய பஞ்சு கொள்கை” உடனடி அமல்படுத்த வேண்டும். அவ்வாறு ஒரு கொள்கையை செயல்படுத்தும் பட்சத்தில், ஜவுளி உற்பத்தி பிரிவினரிடையே நல்லிணக்கத்தை வளர்க்க வழி வகுத்து, அவர்கள் மத்தியில் ஒரு சமநிலை உருவாகும். பருத்தி விலை, கடந்த 15 நாட்களில் 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து, ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியை பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த விலை உயர்வு பன்னாட்டு வர்த்தகர்களுக்கு மட்டுமே பயனளிக்கும், விவசாயிகளுக்கு அல்ல. சீசன் முடியும் வரை இது, தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இச்சூழலில், பருத்தி கொள்முதல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நூற்பாலைகள் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. பருத்தி சீசன் காலத்தில் 11 சதவீத இறக்குமதி வரி விதிப்பதும், சீசன் அல்லாத காலத்தில் விலக்களிப்பதும் விவசாயிகளுக்கும், நூற்பாலைகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும். இது, சீரான ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும். இவ்வாறு எஸ்.கே.சுந்தரராமன் கூறினார்.

The post பருத்தி விலை ஏற்றம் காரணமாக நூற்பாலைகள் பீதி அடைய வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,South Indian Mills Association ,SAIMA ,President ,SK Sundararaman ,India ,Dinakaran ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...