×

வாகன பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்

திருவண்ணாமலை, மார்ச் 2: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனம் தொடர்பாகவும், ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாகவும் விண்ணப்பித்து வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்கள், இனிமேல் விரைவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கும் நடைமுறை கடந்த 28ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணம் விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக வழங்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, முகவரி மற்றும் செல்போன் எண், வாகன எண் ஆகியவை தவறுதலாக இருந்தால், அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளலாம். விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் ஆவணங்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் துறை மூலம் வழங்கப்படாமல் திரும்ப வரப்பெற்றால், விண்ணப்பதாரர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் வந்தாலும் அவர்களிடம் எக்காரணம் கொண்டும் நேரடியாக ஒப்படைக்கப்படாது. உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை பெற்றுக் கொண்டு, அதன் மூலமாகவே அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தினமும் மாலை 4 மணி வரை பிரிண்ட் செய்யப்படும் ஆவணங்களை, அன்றைய தினமே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வாகன பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் appeared first on Dinakaran.

Tags : Collector Bhaskara Pandian Information District Transport Offices ,Thiruvannamalai ,Thiruvannamalai Collector Bhaskara Pandian ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...