×

நியூசிலாந்துக்கு எதிராக ஆஸி. வலுவான முன்னிலை

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 204 ரன் முன்னிலை பெற்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசியது. முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, 2ம் நாளான நேற்று 383 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (115.1 ஓவர்). கிரீன் – ஹேசல்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஹேசல்வுட் 22 ரன் எடுத்து ஹென்றி பந்துவீச்சில் ரச்சின் வசம் பிடிபட்டார். கிரீன் 174 ரன்னுடன் (275 பந்து, 23 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் மேட் ஹென்றி 5, ஓ’ரூர்கே, குகெலெஜின் தலா 2, ரச்சின் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்னுக்கு சுருண்டது. பிளண்டெல் 33, பிலிப்ஸ் 71, ஹென்றி 42 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஆஸி. தரப்பில் நாதன் லயன் 4, ஹேசல்வுட் 2, ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஷ் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 204 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 13 ரன் எடுத்துள்ளது. ஸ்மித் 0, லாபுஷேன் 2 ரன்னில் அவுட்டாகினர். கவாஜா 5, லயன் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post நியூசிலாந்துக்கு எதிராக ஆஸி. வலுவான முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Aussies ,New Zealand ,Wellington ,Australia ,Basin Reserve ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...