×

சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக தேக்கடியில் புதிய ‘செல்பி பாயின்ட்’: ரூ.3.5 லட்சத்தில் வனத்துறை அமைப்பு

கூடலூர்: தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், படகுத்துறையில் அம்மாநில வனத்துறை சார்பில் ரூ.3.5 லட்சம் செலவில் புதிய செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்குள்ள இயற்கை அழகை ரசிக்கவும், பெரியாறு அணை நீர்த்தேக்கத்தை கண்டுகளிக்கவும், தினசரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.

தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பலபொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. இருப்பினும் தேக்கடி நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம். இதனால், படகுசவாரி சுற்றுலாப் பயணிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

* செல்பி பாயின்ட் அமைப்பு

இந்நிலைகளில், தேக்கடி படகுத்துறையில் சுற்றுலாப் பயணிகளை கவர, அம்மாநில வனத்துறை சார்பில் ரூ.3.5 லட்சம் செலவில் பொம்மை புலியுடன் கூடிய செல்பி பாயின்ட் அமைத்துள்ளனர். எர்ணாகுளத்தைச் சோந்த ஜிஜோ என்பவரின் கைவண்ணத்தில் மரக்கிளையில் புலி ஓய்வெடுப்பதைப் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேக்கடியின் இயற்கை எழில் தெரியும் வகையில் சுற்றுலாப்பயணிகள் புலிகளுடன் செல்பி எடுக்கும் விதமாக இதை அமைத்துள்ளனர். தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், திரும்ப செல்வதற்கு முன் நினைவில் சேமித்து வைக்க புகைப்படம் எடுப்பதற்கு இந்த செல்பி பாயின்ட் மையப்புள்ளியாக இருக்கும். மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பகுதியாக இந்த செல்பி பாயின்ட் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக தேக்கடியில் புதிய ‘செல்பி பாயின்ட்’: ரூ.3.5 லட்சத்தில் வனத்துறை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : DEKKADI ,KUDALUR ,AMMANID FOREST ,DEPARTMENT ,TEKADI ,Tekkady ,Idukki ,Kerala ,Tekkadi ,Dinakaran ,
× RELATED கூடலூரில் பரபரப்பு மாணவியின் கருவை...