×

ஜம்முவில் ஓட்டுநர் இல்லாமல் 70 கிமீ ஓடிய ரயில் ஓட்டுநர் பணி நீக்கம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கதுவா ரயில் நிலையத்தில் கடந்த 25ம் தேதி, ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டிருந்த 53 பெட்டிகளுடன் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. சாய்வாக இருந்த ரயில் பாதையில் தானாக நகர்ந்து ரயில் ஓட தொடங்கியது. சுமார் 70 கி.மீ. பயணம் செய்த நிலையில், பஞ்சாப் உச்சி பஸ்சி நிலையத்தில் மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகளின் உதவியோடு ரயில் நிறுத்தப்பட்டது. நல்ல வேளையாக உயிரிழப்புகள், சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், கதுவா நிலையத்தில் சரக்கு ரயிலின் இன்ஜின் மற்றும் 3 பெட்டிகளை நிறுத்தி வைப்பதற்கு பிரேக் பயன்படுத்தியதாக ஓட்டுநர் சந்தீப்குமார் தெரிவித்தார். ஆனால், இறுதியாக ரயில் தடுத்து நிறுத்தப்பட்ட உச்சி பஸ்சி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தபோது பிரேக் பயன்படுத்தப்படாதது கண்டறியப்பட்டது. இதனால் பணியில் அலட்சியாக செயல்பட்ட குற்றச்சாட்டில் ரயில் ஓட்டுநர் சந்தீப் குமாரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி வடக்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான உத்தரவை பிறப்பித்து கோட்ட பொறியாளர் வெளியிட்ட நோட்டீஸில், ‘ரயில்வே விதிமுறைகளின் படி, ஓட்டுநர் சந்தீப் குமார் செயல்படவில்லை. அவரது அலட்சியம் பெரிய விபத்துக்கு வழிவகுத்து, உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு தரத்துக்கு இழுக்காக மாறியுள்ளது. இந்த சம்பவத்தால் ஜலந்தர் கன்டோன்மென்ட்-ஜம்மு தாவி ரயில் வழித்தடத்தில் 12 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. எனவே, விதிமுறைப்படி சந்தீப் குமாரை பணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

The post ஜம்முவில் ஓட்டுநர் இல்லாமல் 70 கிமீ ஓடிய ரயில் ஓட்டுநர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Jammu ,Kaduwa railway station ,Kashmir ,Dinakaran ,
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...