×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

காதலில் விழுந்தேன்!

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

காதலைப் பற்றி பேசினாலும், காதலைப் பற்றிச் சிந்தித்தாலும் கூட மனிதர்களுக்கு என்றுமே ஒரு புத்துணர்ச்சியைத் தருவதாகும். நாம் விரும்பப்படுகிறோம் அல்லது நாம் ஒருவரை விரும்புகிறோம் என்பதே மிகப்பெரிய பொக்கிஷமாகவும், புனிதமாகவும் நினைக்கிறோம். அந்த எண்ணத்தினால் மட்டுமே காதலுக்கு ஒரு நன்றியுணர்வுடன் மனிதர்கள் என்றுமே இருப்பார்கள்/இருக்கிறார்கள். ஆனால் அதே காதல் பிரிவைச் சந்தித்தாலோ அல்லது அதற்கு உங்கள் பார்ட்னரிடம் இருந்து எதிர்ப்பு வந்தாலோ உலகை புரட்டிப் போட்டு ஒரு யுத்தம் செய்ய தயாராகுகிறார்கள். காதலைத் தவிர இந்த உலகில், வேறு எதுவும் அவர்களுக்குத் தேவைப்படவும் செய்யாது, தேவையுமில்லைஎன்றே தொடர்ந்து கூறுவார்கள்.

ஏன் மனிதர்கள் காதலுக்கு இத்தனை அடிமையாகி இருக்கிறார்கள். ஏன் மனிதர்கள் காதலுக்கு துரோகம் ஏற்பட்டால், யுத்தம் செய்கிறார்கள், ஏன் காதல் என்ற உணர்வு மனிதர்களை சரணடையவும், வெகுண்டெழவும் வைக்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்தக் கட்டுரை ஒரு சிறு பதிலாக இருக்கும்.பலவகை உணர்வுகளை காதலில் அனுபவித்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். காதலும், காதல் என்ற உணர்வு இல்லாமல் எந்த வரலாற்று மனிதர்களும், ஏன் நம் வீட்டு முன்னோர்கள் கூட யாரும் இல்லை.

காதல் மட்டுமல்ல, காதலைச் சார்ந்த உணர்வுகளும் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்று வாழ்க்கைக்குள் அடுத்தடுத்து நிகழ்வுக்குள், அதாவது வேலை, படிப்பு, சம்பாத்தியம் என்று இருப்பவர்களை நம் வரலாற்றில் உள்ள எந்தவொரு சமூகமும் எதுவும் இதுவரைக்கும் யாரையும் பெரும்பாலும் குறை சொல்வதில்லை.

ஆனால் காதல் மட்டுமே பெரிது, காதல் மட்டுமே உன்னதமானது, காதல் மட்டுமே தூய்மையானது என்று கூறுபவர்களைப் பார்க்கும்போது மட்டுமே சமூகத்திற்கு அவர்கள் மீது ஒருவித அச்சம் ஏற்படுகிறது. ஏனென்றால் காதலால் அவர்களும், அவர்கள் குடும்பமும் தழைக்க வேண்டும் என்பதே நம் குடும்ப அமைப்பில் உள்ளவர்களின் ஒரு அடிப்படை ஆசையாக அனைவருக்கும் இருக்கிறது.. காதலால் எந்தவொரு மனிதனும் தன்னைத் தொலைத்து, மற்றவர்களின் வாழ்க்கையையும் தொலைத்து விடக்கூடாது என்பதே இந்தச் சமூகத்தின் பயம் தான், காலம் காலமாக காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

ஏன் பெரியவர்கள் காதலை எதிர்க்கிறார்கள் என்றால்?

இங்கு காதலைப் பற்றி எந்தவொரு குடும்ப அமைப்பும், படிக்கும் பள்ளிகளிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் கூட யாருமே பேசுவதில்லை. காதலைப் பற்றிச் சமூகத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு நபர் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒன்று சினிமா வழியாகவும், இலக்கியத்தின் வழியாகவும்தான் தெரிந்து கொள்கிறார்கள். காதல் என்ற வார்த்தையை எளிதாக குழந்தைப் பருவத்திலேயே உச்சரிக்கக் கூடாது என்பதை வீடுகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதனாலேயே காதல் என்ற வார்த்தை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு ஈர்ப்பு இருப்பதால், அதனைப் பற்றிய தேடுதலும், அதனைப் பற்றிய சிந்தனையும் அதிகமாகிறது.இப்படி சிறுவயதிலிருந்து உள்ள ஈர்ப்பின் காரணமாகவும், அந்தத் தேடுதலில் ஒரு காதல் அமைந்து விட்டால் அந்தக் காதலில் இருந்து யாரும் எளிதாக திரும்பி வர மாட்டார்கள். இங்கு மனிதர்கள் கூட பழகுவது என்பது மிக இயல்பானது என்றே நம்புகிறார்கள். அதே போல், நமக்குப் பிடித்த, கற்பனை செய்த ஒரு நபருடன் பழகப் போகிறோம் என்ற அலட்சிய மனப்பான்மை உடன்தான் பெரும்பாலும் காதலைக் கையாளுகிறார்கள். காதல் என்ற வார்த்தையை மதிக்கும் நம்மால், அந்த வார்த்தைக்குள் இருக்கும் மனிதர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு யாரும் மெனக்கெட மாட்டார்கள்.

அப்படி ஒரு நபரைப் பற்றி பெரிதாக தெரிந்து கொள்ளாமல், ஒரு கற்பனை உலகிலிருந்து பழக ஆரம்பிக்கும் போது, அதில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் வரும் போது, தனக்கு ஏற்பட்ட பெரிய நம்பிக்கைத் துரோகம் போலவும், பெரிதாக ஏமாற்றப் பட்டதாகவும் யோசிக்க ஆரம்பிப்போம். தன்னைப் பற்றி மட்டுமே, தன்னைச் சுற்றி மட்டுமே யோசிக்கும் நபர்களைப் பற்றி மட்டும் தான் காதலின் ஆபத்தையும், அதனால் ஏற்படும் நடவடிக்கையின் தீவிரத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்று அதிகமாகத் தேவைப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மீது அதீத கவனத்தையும் அல்லது ஏனோதானோவென்று வளர்த்து இருந்தாலும் பிரச்னைக்குரியதே என்று உளவியல் துறையில் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டு நடவடிக்கைகளும் (Behaviour), அவர்களின் தனிப்பட்ட ஆளுமைத் தன்மையை (Personality) பாதிப்புக்கு உள்ளாக்கும். முதலாவதாக அதீத கவனம் கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தை, தன் பெற்றோர் போல், தன்னுடைய பார்ட்னரும் தன் மீது மட்டுமே அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதைப் பூர்த்தி செய்ய முடியாத பார்ட்னராக இருப்பின், அவர்களுடன் சண்டையும், சச்சரவும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இரண்டாவதாக பெற்றோரால் தான்தோன்றித் தனமாக வளரும் குழந்தை, வளர்ந்த பின், யார் கேள்வி கேட்டாலும் அவர்களுக்குப் பிடிக்காது. அம்மாதிரி வளர்ந்த ஒருவரிடம், காதலன்/காதலி யாரோ ஒருவர் தொடர்ந்து அவர்களின் உறவுகளுக்குள் சாதாரணமாக நடக்கும் விஷயங்களைக் கூட கேள்வியாக கேட்டால், அது அவர்களுக்கு ஒரு வித ஒவ்வாமை உணர்வைக் கொடுக்கும். இதற்கெல்லாம் எதற்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும், அதற்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு மேலோங்கி நிற்கும்.

இம்மாதிரி தனிப்பட்ட நபரின் ஆளுமைக் கோளாறு உள்ள நபர்களால் காதலை புறந்தள்ளவும் முடியாது, காதலித்தவரை எளிதாக விட்டு வெளியேறவும் முடியாது. அந்நேரத்தில்தான், ரொம்ப புலம்புவார்கள். இந்த உலகத்தில் அவர்கள் மட்டுமே வஞ்சிக்கப்பட்ட நபராகவும், காதலுக்குத் தகுதியில்லாத நபராகவும் இருப்பதாக தொடர்ந்து அந்த சிந்தனைக்குள் மட்டுமே இருப்பார்கள். இம்மாதிரி நபர்களுக்கு தொடர்ந்து, அவர்கள் காதலாலும், காதலைப் பற்றிய சிந்தனையாலும் என்ன மாதிரி எல்லாம் அவர்களுடைய நடவடிக்கைகள், செயல்முறைகள், சமூக வாழ்வியல் பாதிக்கிறது என்பதை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இங்கு இவர்களின் Cognitive Function இல் மீண்டும், மீண்டும் தெளிவைக் ஏற்படுத்துகிற விதத்தில் சொன்னால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை, காதலின் சிந்தனையால் என்ன மாதிரி தனிப்பட்ட நபரின் நடவடிக்கை சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்று காண்பிக்க வேண்டும்.

அப்படிச் செய்தால் தான், காதலைத் தாண்டிய வாழ்க்கையை வேறோரு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிப்பார்கள். தனி நபரின் ஆளுமை மற்றும் நடவடிக்கைகளை மாற்றாமல், சிந்தனையை மாற்றி, மற்றவற்றில் கவனம் செலுத்த சொன்னோமானால், அதை அவர்களால் செய்ய இயலாது. அதனால்தான் சாதாரண நபர்களின் காதலின் தோல்வியும், ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்ட நபர்களின் காதலின் தோல்வியும் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரியும். அவற்றைத் தெரிந்து கொண்டால்தான், காதலைப் பற்றி தொடர்ந்து புலம்புவதின் தீவிரத் தன்மையை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

அதனால் காதலில் தோற்று விட்டோம் என்று சொல்பவர்களைப் பார்க்க நேரிடும் போது, அதற்கான விழிப்புணர்வாகவும், அதை சரி செய்யும் முயற்சியைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு வேலைக்குத் தன்னைச் சிறப்பான நபராக காண்பிக்க எத்தனை விதமான புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அது போல், நமக்குப் பிடித்த, நாம் ஆசைப்படும் நபருடன் காதலுக்காகவும் நாம் நம் ஆளுமையை மாற்றும் திறனை மேம்படுத்தவும், அதிலுள்ள குறைகளை பார்ட்னர் சொன்னால், அதை ஏற்றுக் கொண்டு சரி செய்ய முன் வர வேண்டும்.

குழந்தையாக இருக்கும்போது மட்டுமே நம்முடைய குணங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கும் நாம்தான், வளர்ந்த பின் நம்முடைய குணங்களை நாம் விரும்பும் பார்ட்னர் குறையாக சொல்லும்போது, ஈகோவும், நம்முடைய Attitudeம் முன்னாடி வந்து நிற்கும். பார்ட்னர் சொல்வதை காது கொடுத்து கேட்கத் தேவையில்லை என்றே நினைக்கிறார்கள். பார்ட்னர் என்றுமே நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்றே கட்டளையாக சொல்லாமல் சொல்கிறீர்கள்.

காதலில் எல்லாம் ஈகோவும், Attitude ம் இருந்தால், வாழ்நாள் உறவாக நீடிப்பது, இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சிரமம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதனால் உங்கள் காதலுக்கும், உங்களுக்கு வருகிற, வரப்போகின்ற காதலனுக்கும், காதலிக்கும் செய்யும் மரியாதையாக என்னவென்றால், அவர்களைப் புரிந்து கொண்டு, உங்கள் ஆளுமையையும், உங்கள் குணாதிசயங்களையும் மேம்படுத்த முயற்சி செய்வதே உங்கள் காதலுக்குச் செய்யும் மரியாதையாகும்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Gayatri Mahathi ,
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!