×

மாவா பதுக்கி விற்ற 3 பேர் கைது: 150 கிலோ மாவா, ஜர்தா பறிமுதல்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் மாவா பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 150 கிலோ மாவா, ஜர்தா பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவா, ஹான்ஸ், கஞ்சா, போதை பாக்கு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை உதவி ஆணையருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில், உதவி ஆணையரின் தனிப்படை போலீசார், வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, வண்ணாரப்பேட்டை டிபிகே தெருவை சேர்ந்த சனா உல்லா (40) என்பவர் வீட்டில் மாவா தயாரிக்கும் மூல பொருள் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்து 50 கிலோ ஜர்தா, 50 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. சனா உல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமைந்தகரையை சேர்ந்த சுமன் என்பவர் மாவா தயாரிக்கும் மூலப்பொருட்களை தன்னிடம் தந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இவர் கொடுத்த தகவலின்பேரில் மண்ணடி இப்ராகிம் தெருவை சேர்ந்த அன்சர் பாஷா (43), ஆட்டோ டிரைவர் கிஷோர் குமார் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 கிலோ ஜர்தா, 15 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சனா உல்லா உட்பட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான சுமனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாவா பதுக்கி விற்ற 3 பேர் கைது: 150 கிலோ மாவா, ஜர்தா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Zarda ,Thandaiyarpet ,Vannarpet ,Mawa ,Hanes ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு