×

செல்போன் திருடிய வாலிபர் மீது வெந்நீர் ஊற்றி அடித்து சித்ரவதை: சிறுவன் உட்பட 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் செல்போன் திருடிய வாலிபர் மீது வெந்நீர் ஊற்றியும் அடித்தும் சித்ரவதை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு செல்போன் திருடிய வாலிபரும் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (28). தண்டையார்பேட்டை வீராகுட்டி தெருவில் ஏசி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மெக்கானிக்கடை அருகே சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவைத்திருந்தார்.

திரும்பி வந்தபோது பைக் சீட் கவரில் வைத்திருந்த செல்போன் காணவில்லை. இதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கொருக்குப்பேட்டை ரயில்நிலையத்தில் மடக்கி பிடித்து ஏசி மெக்கானிக் கடைக்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் அவரை அடித்து துன்புறுத்தி முதுகில் வெந்நீரை ஊற்றியும் இரும்பு கம்பியால் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். அதன்பிறகு வாலிபரை தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, செல்போன் திருடிய வாலிபர் போதையில் இருந்ததும், தண்டையார்பேட்டை மேற்கு கே.ஜி.கார்டனை சேர்ந்த தனசேகர் (29) என்பதும் ஆர்.கே.நகரில் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் ஏசி மெக்கானிக் கடை உரிமையாளர் ராஜேஷ் (28), கடையில் வேலை செய்யும் நந்தம்பாக்கத்தை சேர்ந்த பரணிதரன் (21), திருச்செந்தூரை சேர்ந்த பயாஸ் அகமது (20), 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்துகொண்டு தனசேகர் மீது வெந்நீர் ஊற்றி சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில், தப்பிய ஏசி மெக்கானிக் கடை உரிமையாளர் ராஜேஷை தேடி வருகின்றனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய தனசேகரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post செல்போன் திருடிய வாலிபர் மீது வெந்நீர் ஊற்றி அடித்து சித்ரவதை: சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Korukuppet ,Rajesh ,Korukuppet, Chennai ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு