×

அயனாவரம், தலைமை செயலக காலனியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 18 கிலோ பறிமுதல்

பெரம்பூர்: சென்னை அயனாவரம், தலைமை செயலக காலனி பகுதிகளில் ஒருசிலர் வெளிமாநிலங்களில் கஞ்சா கடத்திவந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக நேற்று அயனாவரம் போலீஸ் உதவி கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், எஸ்ஐ கார்த்திக் தலைமையில் போலீசார் நியூ ஆவடி சாலை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், பண்டல்களாக 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரை காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருச்சி, ராஜ் நகரை சேர்ந்த தேவேந்திரன் (32) என்பதும், இவர் அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக ரயிலில் கடத்தி வந்து, தலைமை செயலக காலனி பகுதிகளில் கூடுதல் விலைக்கு சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், எஸ்ஐ அய்யனார் தலைமையில் நேற்று மாலை அயனாவரம், ஆண்டர்சன் சாலை அருகே பூங்கா பகுதியில் சந்தேக நிலையில் நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவரது பேக்கில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் புதுவை மாநிலம், குஞ்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரதீப் (27) என்பதும், இவர் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அயனாவரம் பகுதியில் மற்றொருவரிடம் சில்லறை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரதீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post அயனாவரம், தலைமை செயலக காலனியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 18 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ayanavaram ,Chief Secretariat ,Colony 2 ,Perambur ,Assistant Commissioner of Police ,Ayanavaram Muthukumar ,Colony ,Chennai ,Chief Secretariat Colony Inspector ,Mukesh ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...