×

சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று முகூர்த்தம் நாள் அதை தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 365 பேருந்துகளும், நாளை 425 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பேருந்துகளும் மற்றும் நாளை 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 435 சிறப்பு பேருந்துகளும், நாளை 495 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 7201 பயணிகள், சனிக்கிழமை 2839 பயணிகள் மற்றும் ஞாயிறு அன்று 6392 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களது பயணத்திற்கு www.tnstc.in , செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

The post சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Subhamukurtham ,Transport Corporation ,Chennai ,Government Rapid Transport Corporation ,Mukurtham day ,Tamil Nadu ,Tamil Nadu Government Transport Corporations ,
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...