×

நிலம் அபகரித்தல், பாலியல் தொடர்பாக 1,250 புகார்; 55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் நிர்வாகி கைது: தொடர் போராட்டம், ஐகோர்ட் உத்தரவால் அதிரடி

கொல்கத்தா: நிலம் அபகரித்தல், பாலியல் தொடர்பாக 1,250 புகாருக்கு ஆளாகி 55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் நிர்வாகியை போலீசார் இன்று காலை கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் (53) என்பவர், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்தும், அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காளியில் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இதுதொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக் கண்டறியும் குழு சந்தேஷ்காளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது.

சந்தேஷ்காளி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தேசிய பட்டியலின ஆணையம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதற்கிடையே, சந்தேஷ்காளி விவகாரத்தை தானாக முன்வந்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரித்தது. ஷேக் ஷாஜகானை உடனே கைது செய்ய உத்தரவிட்டது. தேசிய அளவில் அழுத்தம் எழுந்ததை தொடர்ந்து, நில அபகரிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஷேக் ஷாஜகானின் உதவியாளர்கள் ஷிபர்சாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த 55 நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் இன்று கைது செய்யப்பட்டார். வடக்கு 24 பர்கானாஸில் உள்ள மினாகான் பகுதியில் கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன்பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பொதுமக்கள் நிலங்களை அபகரித்தல், அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 1,250 புகார்கள் வந்துள்ளன. ஷேக் ஷாஜகானுக்கு எதிரான வழக்கை மார்ச் 4ம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. ஏற்கனவே ஷேக் ஷாஜகானை கைது செய்ய சிபிஐ, அமலாக்க இயக்குனரகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மாநில போலீசார் ஷேக் ஷாஜகானை கைது செய்துள்ளனர்’ என்றனர்.

The post நிலம் அபகரித்தல், பாலியல் தொடர்பாக 1,250 புகார்; 55 நாட்களாக தலைமறைவாக இருந்த திரிணாமுல் நிர்வாகி கைது: தொடர் போராட்டம், ஐகோர்ட் உத்தரவால் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Trinamool ,ICourt ,KOLKATA ,Trinamool Congress ,Sheikh Shahjahan ,Sandeshkali, West Bengal ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை...