×

கட்சி மாறி 6 எம்எல்ஏக்கள் வாக்களித்த நிலையில் இமாச்சல் காங்கிரஸ் அமைச்சர் திடீர் ராஜினாமா: ஆட்சி கவிழும் ஆபத்து; முதல்வர் பதவி விலகியதாக பரபரப்பு; 15 பாஜ எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜ பக்கம் சாய்ந்துள்ள நிலையில், அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சுக்விந்தர் சுக்குவும் பதவி விலகியதாக வதந்தி கிளம்பியதால் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. இமாச்சல் பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 43 எம்எல்ஏக்களை கொண்ட ஆளும் காங்கிரசை எதிர்த்து 25 எம்எல்ஏக்களை கொண்ட பாஜ கட்சி, வேட்பாளரை நிறுத்தியது. வாக்களிப்பில் காங்கிரசின் 6 அதிருப்தி எம்எல்ஏக்களும், 3 ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களும் கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்தனர்.

இதனால், பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா 34 ஓட்டுகள் பெற்று சமநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, குலுக்கல் மூலம் பாஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, காங்கிரஸ் அரசின் பெரும்பான்மை கேள்விக்குறியானதைத் தொடர்ந்து, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. மபி, கோவா, மகாராஷ்டிரா போல பின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜ காய் நகர்த்தத் தொடங்கியது. இந்நிலையில், இமாச்சலில் நேற்று அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் நடந்தன. 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜ பக்கம் சாய்ந்த நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சரும் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘கட்சியின் நான் அவமதிக்கப்பட்டேன். என்னை மட்டம்தட்டம் முயற்சிகள் நடந்தன. கடந்த 2 நாட்கள் நடந்த நிகழ்வுகளால் மிகவும் வேதனை அடைந்தேன். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவும் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை முதல்வர் சுகு மறுத்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் ஒரு போராளி. ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். எனது அரசு முழு ஐந்தாண்டு பதவிக்காலம் நீடிக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, இமாச்சலில் ஆட்சியை தக்க வைக்க நடவடிக்கை எடுப்பதற்காக 3 மூத்த பார்வையாளர்களை அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சூழலில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பாஜ எம்எல்ஏக்கள் மாநில ஆளுநரை சந்தித்தனர். அதோடு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பாக சபாநாயகர் அறைக்கு சென்று கடும் விவாதம் செய்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில், சபாநாயகரை அவமரியாதை செய்ததாகவும், அவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் பாஜ உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரி, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சவுகான் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர் உள்ளிட்ட 15 பாஜ எம்எல்ஏக்களை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா சஸ்பெண்ட் செய்தார். இத்துடன் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் தந்து, 7 நாளில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* டி.கே.சிவக்குமார் சிம்லா விரைவு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘ஆபரேஷன் தாமரை மூலம் இமாச்சல் மக்களின் ஆணையை பாஜவால் பறிக்க முடியாது. அதை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் செய்கிறது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, 3 மூத்த பார்வையாளர்களான பூபேஷ் பாகேல், பூபிந்தர் ஹூடா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சிம்லாவுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் அதிருப்தியில் உள்ளவர்கள் உட்பட அனைத்து எம்எல்ஏக்களுடன் பேசி விரைவில் விரிவான அறிக்கை அனுப்புவார்கள். அதன்பிறகு எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் நலன் முக்கியமல்ல, கட்சிதான் மேலானது, மக்கள் ஆணையும் முக்கியம். எனவே காங்கிரஸ் கடினமான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது. இமாச்சலில் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க பார்க்கும் பாஜ திட்டம் நிறைவேறாது’’ என்றார்.

சட்டப்பேரவையில்
கட்சிகளின் பலம்
மொத்த இடங்கள் 68
பெரும்பான்மைக்கு தேவை 35
காங். 40
பாஜ 25
சுயேச்சை 3

* கடந்த 2017 தேர்தலில் பாஜ 44 இடங்களில் வெற்றி பெற்று 5 ஆண்டு ஆட்சி செய்தது. அதைத் தொடர்ந்து 2022 தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். தற்போது 6 அதிருப்தி எம்எல்ஏக்களையும், 3 சுயேச்சைகளையும் பாஜ தன் பக்கம் இழுத்துள்ளதால், காங்கிரசின் பெரும்பான்மை பலம் கேள்விக்குறியாகி உள்ளது.

* மக்கள் ஆணையை நசுக்க பாஜ முயற்சி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், ‘‘ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அத்தகைய உரிமையை பயன்படுத்தி, இமாச்சல் மக்கள் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தனர். ஆனால் பணபலம், விசாரணை அமைப்புகளின் பலத்தால் ஒன்றிய பாஜ அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இமாச்சல் மக்களின் ஆணையை நசுக்கப் பார்க்கிறது. 43 எம்எல்ஏக்களை கொண்ட கட்சிக்கு 25 எம்எல்ஏக்கள் கொண்ட கட்சி சவால் விடுக்கிறது என்றால் அது குதிரை பேரத்தை நம்பியிருப்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் அணுகுமுறை நெறியற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை பேரிடரின் போது இமாச்சல் மக்களோடு நிற்காத பாஜ இப்போது அரசியலில் பேரழிவை ஏற்படுத்த பார்க்கிறது’’ என கூறி உள்ளார்.

* அதிருப்தி எம்எல்ஏக்களை வரவேற்ற பாஜவினர்
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று 6 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கட்சி மாறி வாக்களித்த அவர்கள் உடனடியாக அரியானாவின் பஞ்ச்குலாவுக்கு கடத்தப்பட்டனர். அங்கிருந்து நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சிம்லாவுக்கு அழைத்து வரப்பட்டனர். சட்டப்பேரவையில் அவர்கள் நுழைந்ததும், பாஜ எம்எல்ஏக்கள், ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டு வரவேற்றனர்.

The post கட்சி மாறி 6 எம்எல்ஏக்கள் வாக்களித்த நிலையில் இமாச்சல் காங்கிரஸ் அமைச்சர் திடீர் ராஜினாமா: ஆட்சி கவிழும் ஆபத்து; முதல்வர் பதவி விலகியதாக பரபரப்பு; 15 பாஜ எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Himachal Congress ,minister ,Chief Minister ,BJP ,Shimla ,Himachal Pradesh ,Sukhwinder Sukku ,Dinakaran ,
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்