×

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுக்கு பின் குறைப்பு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணத்தை 4 ஆண்டுகளுக்குப் பின் குறைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு பெரிதும் பயனளிக்காது என பயணிகள் தெரிவிக்கின்றனர். தெற்கு ரயில்வே, விரைவு(எக்ஸ்பிரஸ்), அதிவிரைவு(சூப்பர்பாஸ்ட்), பயணிகள் ரயில்(பேசஞ்சர்), சரக்கு ரயில், புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இதில் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்க மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. நெடுந்தூர பயணத்திற்கு விரைவு, அதிவிரைவு, பயணிகள் ரயில் ஆகியவை பயன்பாட்டில் உள்ளது.

இதில் பயணிகள் ரயில் கட்டணம் குறைவாக இருக்கும். இந்த ரயில்கள் அதிக ரயில் நிலையங்களில் நின்று செல்லும். விரைவு, அதிவிரைவு ரயில்களில் கட்டணம் அதிகமாக இருக்கும், நிறுத்தங்கள் குறைவாக இருக்கும். சென்னையில் பெரும்பாலான மக்கள் புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்துவது போல திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என எழை, நடுத்தர மக்கள் தங்கள் அண்றாட பணிகளுக்காக சாதாரண பயணிகள் ரயில்களை பயன்படுத்துவர். கொரோனா காலத்திற்கு முன்பு பயணிகள் ரயிலில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவியபோது ரயில்களில் பயணிகள் கூட்டத்தை குறைக்க சாதாரண பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றி கட்டணத்தை அதிகரித்தது. விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலித்தாலும் அதுபோன்ற வசதிகள் இந்த பயணிகள் ரயிலில் இல்லை. குறைந்தபட்ச ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு நிலையத்துக்கு பயணிக்க ₹30 செலுத்த வேண்டியிருந்தது. ஏனெனில், இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்ச கட்டணமாக செலுத்தவேண் டும்.

கொரோனா தொற்று முடிந்த பிறகும் உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்படாமல் இருந்தது. இதனால் ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இந்நிலையில், சாதாரண பயணிகள் ரயில்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-திருப்பதி மெமு ரயில் கட்டணம் ₹70ல் இருந்து ₹35ஆக குறைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான சாதாரண பயணிகள் ரயில் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை, பயணிகள் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பல பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டது. இந்நிலையில் குறைவான அளவில் உள்ள பயணிகள் ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்காது என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுக்கு பின் குறைப்பு: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Corona period ,Southern Railway ,Chennai ,Railway Administration ,Corona ,Express ,Southern Railway Information ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...