×

செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை? * சடலத்தை தேடும் போலீஸ் * 2 பேரிடம் தீவிர விசாரணை வந்தவாசி அருகே விருந்துக்கு அழைத்து சென்று

வந்தவாசி, பிப்.28: வந்தவாசி அருகே விருந்துக்கு அழைத்து சென்று செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மாறி மாறி தகவல் அளிப்பதால் போலீசார் சடலத்தை தேடி அலைகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(31). இவர் தனது நிலத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார். சூளையில் அதே கிராமத்தை சேர்ந்த பலராமன்(55), சிவலிங்கம்(35) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி செங்கல் சூளைக்கு தீ வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி தொழிலாளிகளுக்கு மது மற்றும் கறி விருந்து வைக்கப்பட்டது. இதற்காக ரங்கநாதன், சிவலிங்கம் ஆகிய இருவரும் பலராமன் வீட்டிற்கு சென்று விருந்துக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதன்பிறகு பலராமன் வீடு திரும்பவில்லையாம்.

இதனால் மறுநாள் காலை பலராமனின் மகன் முனியன், சூளைக்கு சென்று ரங்கநாதனிடம் தந்தை குறித்து கேட்டுள்ளார். அதற்கு ரங்கநாதன், சிவலிங்கம் ஆகியோர் விருந்து முடிந்து பலராமன் அன்றிரவே வீட்டிற்கு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதனால் அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடியும் பலராமன் கிடைக்கவில்லை. இதுகுறித்து முனியன் கீழ்கொடுங்காலூர் போலீசில் கடந்த 24ம் ேததி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே ரங்கநாதன், அடிக்கடி முனியனிடம் சென்று உனது அப்பா பலராமன் வந்துவிட்டாரா என கேட்டு வந்துள்ளார்.

இதனால் முனியன், ரங்கநாதன் மீது சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் முனியன் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், ரங்கநாதன், சிவலிங்கம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் இருவரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவர்களது நடத்தையில் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் மீண்டும் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது பலராமனை அடித்து கொன்றுவிட்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர். ஆனால் பலராமனின் சடலம் ஏரியில் உள்ளதாகவும், பின்னர் செங்கல் சூளை அருகே உள்ள கிணற்றில் வீசிவிட்டதாகவும், தேக்கு தோப்பில் வீசிவிட்டதாகவும் மாறிமாறி கூறினர். இந்த இடங்களில் போலீசார் தேடி பார்த்தும் பலராமனின் சடலம் கிடைக்கவில்லை. மேலும் செங்கல் சூலை பகுதியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான இடங்களில் ஜேசிபி மூலம் சடலம் புதைக்கப்பட்டு இருக்கலாம் என தோண்டி பார்த்தும் பலன் இல்லை.

இந்நிலையில் டிஎஸ்பி ராஜீ, கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை செங்கல் சூளைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான வீரர்கள் செங்கல் சூளை அருகே உள்ள கிணற்றில் பலராமனின் சடலம் உள்ளதா என தேடும் பணியில் ஈடுபட்டனர். சடலம் இல்லை என கூறி சென்ற நிலையில் போலீசார் மின் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சேரில் சிக்கி இருக்கலாம் என பார்த்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் தண்ணீர் வெளியேற்றிய நிலையிலும் சடலம் கிடைக்கவில்லை.

எனவே பலராமனின் சடலத்தை செங்கல் சூளையில் வைத்து எரித்துவிட்டார்களா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சடலத்தை கண்டறிய தடயவியல்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் எரியூட்டப்பட்ட செங்கல் சூளையில் தடயங்கள் உள்ளதா என சேகரித்தனர். அதிலும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்காததால் மேலும் 2 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அருகே உள்ள சுகநதி ஆற்றுப்பகுதியில் சடலத்தை வீசி சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று மாலை 5 மணி அளவில் உளுந்தை சுகநதி பகுதிக்கு சென்று போலீசார் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும், 2 நபர்களும் போலீசாருக்கு உரிய பதில் அளிக்காமல் மாறி மாறி பேசுவதால் செய்வது அறியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

The post செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை? * சடலத்தை தேடும் போலீஸ் * 2 பேரிடம் தீவிர விசாரணை வந்தவாசி அருகே விருந்துக்கு அழைத்து சென்று appeared first on Dinakaran.

Tags : Vasi ,Vandavasi ,Thiruvannamalai District ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு