×

புரோ கபடி லீக் தொடர்: அரையிறுதியில் இன்று புனே – பாட்னா மோதல்

ஐதராபாத்: புரோ கபடி தொடரின் 10வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் புனேரி பல்தான் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த புனேரி அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் திகழ்கிறது. அதிரடி பயிற்சியாளர் பி.சி.ரமேஷ் தலைமையில் அஸ்லாம் இனம்தார், மோகித் கோயத், முகமது ரசா, கவுரவ் காத்ரி, தமிழக வீரர் அபினேஷ் நடராஜன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாகும்.

எதிர்த்து விளையாடும் பாட்னாவையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏற்கனவே 3முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணியின் சச்சின், மஞ்சித், சுதாகர், கிரிஷன், அங்கித், முருகேசன் பாபு, தியாகராஜன் யுவராஜ் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். அதனால் வலுவான பல்தானுக்கு பைரேட்ஸ் சவாலாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஜெய்பூர் – அரியானா பலப்பரீட்சை: 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் மோதுகின்றன.

புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்ததால் ஜெய்பூர் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் வென்றதன் மூலம் அரையிறுதிக்குள் அரியானா நுழைந்துள்ளது. நடப்புத் தொடரில் ஆரம்பம் முதலே நடப்புச் சாம்பியனுக்கு உரிய வேகத்தையும், திறமையையும் ஜெய்பூர் வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் அர்ஜூன் தேஷ்வால், தமிழக வீரர் அஜித் குமார் ஆகியோர் ரெய்டிலும், அங்குஷ், ரெசா, சுனில்குமார் ஆகியோர் தற்காப்பு ஆட்டத்திலும் கலக்கி வருகின்றனர்.

அரியானா அணியில் மோகித், ராகுல், ஜெய்தீப் ஆகியோர் தற்காப்பு ஆட்டத்திலும், வினய், ஷிவம், சித்தார்த் ஆகியோர் ரெய்டிலும் அணிக்கு வலு சேர்த்து வருகிறன்றனர். நட்சத்திர வீரர்கள் சந்திரன் ரஞ்சித், பிரபஞ்சன் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையிலும் அரியானா அரையிறுதியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

*  புனே – பாட்னா அணிகள் இதுவரை 21 முறை மோதியுள்ளதில் பாட்னா 13-4 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (4 போட்டி ‘டை). நடப்பு தொடரில் மோதிய 2லீக் ஆட்டங்களில் ஒன்றில் புனே 46-28 என்ற கணக்கில் வென்ற நிலையில், மற்றொரு ஆட்டம் 32-32 என சரிசமனில் முடிந்தது.
 ஜெய்பூர் – அரியானா 14 முறை மோதியுள்ளதில் ஜெய்பூர் 9-3 என முன்னிலை வகிக்கிறது (2 போட்டி ‘டை’). நடப்பு தொடரில் மோதிய 2 ஆட்டங்களிலும் ஜெய்பூர் அணியே வென்றுள்ளது (45-34, 37-27).

The post புரோ கபடி லீக் தொடர்: அரையிறுதியில் இன்று புனே – பாட்னா மோதல் appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi League Series ,Pune ,Patna ,Hyderabad ,Pro Kabaddi ,Puneri Paltan ,Patna Pirates ,Puneri ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!