×

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றி டோனி சாதனையை சமன் செய்த ரோகித்சர்மா: ஜெய்ஸ்வால், அஸ்வின், ஜூரலும் சாதனை

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் வரிசையில் ராகுல் டிராவிட்டை. ரோகித் சர்மா முந்தினார். டிராவிட் இந்திய கேப்டனாக 8 டெஸ்ட் போட்டிகளில் வென்ற நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒன்பது வெற்றிகளை பெற்றிருக்கிறார். இதன் மூலம் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார். முதல் இடத்தில் 40 வெற்றிகளுடன் விராட் கோஹ்லியும், 27 வெற்றியுடன் 2வது இடத்தில் டோனியும், 21 வெற்றியுடன் 3ம் இடத்தில் கங்குலியும் ,14 வெற்றிகளுடன் 4வது இடத்தில் அசாருதீன் உள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதுபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது டோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார். டோனி இதுவரை 298 போட்டிகளில் இந்திய அணி வெற்றியில் அங்கம் வகித்த நிலையில், தற்போது இந்த சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். 72 வெற்றிகளில் சச்சின் முதலிடத்திலும், 59 வெற்றிகளில் விராட் கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் அஸ்வின் 58 வெற்றிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வினும், ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனும் தற்போது முதலிடத்தில் உள்ளனர். இருவரும் தலா 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். அதேபோன்று அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 35 முறை வீழ்த்தி கும்ப்ளேவின் ரெக்கார்டை சமன் செய்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடி துருவ் ஜூரல் மூன்றாவது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் முதலிடத்திலும், டோனி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில் துருவ் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி டோனி ஆட்ட நாயகன் விருதை வென்ற நிலையில் தற்போது துருவ் ஜூரலும் அதே நாளில் இந்த விருதை கைப்பற்றி உள்ளார். ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பிராட்மேனும், இரண்டாவது இடத்தில் ஹர்பர்ட் என்ற வீரரும் உள்ளனர்.

 

The post சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றி டோனி சாதனையை சமன் செய்த ரோகித்சர்மா: ஜெய்ஸ்வால், அஸ்வின், ஜூரலும் சாதனை appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Dhoni ,Jaiswal ,Ashwin ,Jural ,Mumbai ,Rahul Dravid ,Dravid ,India ,Pattodi ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...