×

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு ₹1,000

திருவாரூர், பிப்.27: புதுமை பெண் திட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் புலிவலம் தேவா தலைமையிலும், துணைத் தலைவர் துரை தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணகி மற்றும் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

அலுவலக மேலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். இதில் கவுன்சிலர்கள் முருகேசன், குணசேகரன், மணிகண்டன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டு பகுதி கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் தலைவர் புலிவலம் தேவா பேசுகையில், மாவட்டத்திலேயே திருவாரூர் ஒன்றியத்தில்தான் வளர்ச்சி பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர் நிதி, மாவட்ட ஊராட்சிநிதி போன்றவை மூலமும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் உயர்கல்வி படிப்பதற்கு புதுமை பெண் திட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்ல திட்டம், ஏழை குடும்பங்கள் வறுமை அகற்றிட திட்டம், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி போன்ற உன்னத திட்டங்களை வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துகொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் சிதம்பரம், வேதவிநாயகம், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்டம், கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு ₹1,000 appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Chief Minister of Tamil Nadu ,Tiruvarur Panchayat Union Committee ,
× RELATED திருவாரூர்-விளமல்-கும்பகோணம்...