×

திருச்சியில் போலீசை சுட முயன்ற வழக்கில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதி உட்பட 5 ேபர் திருவனந்தபுரத்தில் கைது

திருவனந்தபுரம்: மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் துபாயில் பணிபுரிந்த போது ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதன்பின் ஊர் திரும்பிய இவர் இகாமா என்ற அமைப்பை தொடங்கி சிறுவர்களுக்கு ரகசியமாக ஆயுதப் பயிற்சி அளித்து வந்தார். இது குறித்து அறிந்த தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ சாதிக் பாஷாவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது.

இந்த வழக்கில் பின்னர் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2022ம் ஆண்டு திருச்சியில் வாகன சோதனையின் போது போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். சமீபத்தில் அவர் சாதிக் பாஷாவை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இவர் 4 பேருடன் நேற்று திருவனந்தபுரம் வட்டியூர்க்காவில் உள்ள 2வது மனைவியின் வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் சாதிக் பாஷா உள்பட 5 பேரையும் பிடித்து வட்டியூர்க்காவு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில் தான் அவர் சாதிக் பாஷா தெரியவந்தது. மேலும் அவர் வந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. காரில் போலீஸ் ஸ்டிக்கர் எப்படி வந்தது என தனக்குத் தெரியாது என்று அவர் போலீசிடம் கூறினார். விசாரணைக்குப் பின் சாதிக் பாஷா உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் சென்னை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட சாதிக் பாஷாவை வட்டியூர்க்காவு போலீசார் பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைத்தனர்.

மோடியை கொல்ல திட்டமா?
இதற்கிடையே மோடியை கொல்வதற்காகத்தான் சாதிக் பாஷா திருவனந்தபுரம் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். இந்நிலையில் சாதிக் பாஷா திருவனந்தபுரம் வந்தது போலீசுக்கும், உளவுத்துறையினருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்காக அவர் வந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் போலீசை சுட முயன்ற வழக்கில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதி உட்பட 5 ேபர் திருவனந்தபுரத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,IS ,Trichy ,Sadiq Pasha ,Needur ,Mayiladuthurai ,Dubai ,Igama ,
× RELATED என்னுடைய மகன் தோற்கப்போவது உறுதி: ஏ.கே. அந்தோணி பேட்டி