×

அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரி மனைவியிடம் செயின் பறித்த காவலர்: பொதுமக்கள் சுற்றிவளைத்தனர்

சென்னை: அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில், அதிகாரி மனைவியிடம் 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடிய காவலரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக இருப்பவர் கமலக்கண்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு, மனைவி விஜயலட்சுமியுடன், உறவினர் ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மெட்ரோ ரயிலில் அரும்பாக்கம் வந்தார். ரயிலில் இருந்து இறங்கி வெளியே நடந்து சென்றபோது மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ராஜதுரை (26), திடீரென கமலக்கண்ணன் மனைவி விஜயலட்சமி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஜயலட்சுமி உதவி கேட்டு அலறினார். அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற காவலர் ராஜதுரையை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் காவலர் ராஜதுரை படுகாயமடைந்தார். இதுகுறித்து வருவாய் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் புகாரின்படி சூளைமேடு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து காவலர் ராஜதுரையை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஆவடி பட்டாலியனில் பணியாற்றி வரும் ராஜதுரைக்கு அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 6 சவரன் செயின் மீட்கப்பட்டது.

பொதுமக்கள் தாக்கியதில் உடல் முழுவதும் காயம் இருந்ததால், காவலர் ராஜதுரைக்கு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின், போலீசார் கைது செய்தனர். ராஜதுரை இதுபோல் வேறு யாரிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரி மனைவியிடம் செயின் பறித்த காவலர்: பொதுமக்கள் சுற்றிவளைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Arumbakkam metro station ,CHENNAI ,Kamalakannan ,Superintendent of Revenue ,Parangimalai Cantonment Board ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்