×

பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27 கடைகளுக்கு விரைவில் ஏலம்: தாம்பரம் மாநகராட்சி தகவல்

தாம்பரம்: பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27 கடைகளுக்கு விரைவில் ஏலம் விடப்படும், என தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது. தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

இதில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தரமான வணிக சேவைகளை வழங்குதல், பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தியாவசிய வணிக சேவைகளை மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மூலதன மான்ய திட்டத்தில், ₹2 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்துர், காமராஜர் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

27 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 27 கடைகளும் விரைவில் ஏலம் விடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், இதன் மூலம் பெருங்களத்துர் பகுதியில் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தாம்பரம் மார்க்கெட் பகுதி வரை செல்லாமல் பெருங்களத்தூர் பகுதியிலேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டு பயன்பெறுவார்கள் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27 கடைகளுக்கு விரைவில் ஏலம்: தாம்பரம் மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Perungalathur Mall ,Tambaram Corporation ,Tambaram ,Perungalathur ,Pallavaram ,Anagaputhur ,Pammel ,Sembakkam ,Birkankaranai ,Madambakkam ,Chitlapakkam ,Tiruneermalai ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!